இந்தியாவில் அனிமேஷன் துறையின் எதிர்காலம் நம்பமுடியாத அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு துறைகளில் அனிமேஷனுக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால் இந்திய அனிமேட்டர்கள், சர்வதேச அரங்கில் தங்கள் முத்திரைகளை பதித்து வருகின்றனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2023 ஆம் ஆண்டில், இந்திய அனிமேஷன் சந்தை 1.37 பில்லியன் அமெரிக்க டாலர் இருந்தது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து, இந்திய அனிமேஷன் சந்தை16.60 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
உயர் துல்லியமான IoT நெட்வொர்க்குகளின் வளர்ச்சி, அதிகரித்த ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் வளரும் வாழ்க்கை முறை போன்றவற்றால் இந்திய அனிமேஷன் துறை அபரிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப வசதிகள், வீடியோக்கள், குறும்படங்கள், திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உள்ளிட்ட அனிமேஷன் உள்ளடக்கத்தை மக்கள் விரும்ப தொடங்கி உள்ளனர்.
5G வரவு, அனிமேஷன் துறைக்கு வரப் பிரசாதமாக அமைத்து விட்டது. மேற்கத்திய கலாச்சார தாக்கங்கள், யதார்த்தமான காட்சிகள் மற்றும் அதிவேக அனுபவங்களுக்கான தேவையைத் தூண்டுகின்றன. 3D மொபைல் கேம்கள் அதிக பிரபலமாகி இருக்கிறது.
இந்திய அனிமேஷன் துறை, பாரம்பரிய கலை வடிவங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் எளிதாக இணைக்கிறது.
உலக அனிமேட்டர்களும், இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெறுகிறார்கள்.
இதிகாசங்கள், புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இந்தியக் கலைக் கூறுகளை தங்கள் அனிமேஷன் படைப்புக்களில் இணைத்து வருகின்றனர்.
புதுமையான வடிவங்களில், இந்திய பாரம்பரியம் என்பது இந்திய அனிமேஷனுக்கு ஒரு தனித்துவமான அழகை தருகிறது. இதனால், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிக வரவேற்பைப் பெறுகிறது.
மேலும், ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்களின் எழுச்சி, இந்திய அனிமேட்டர்களுக்கு தங்கள் தனித் திறமையை வெளிப்படுத்த உதவுகின்றன.
பலவகையான புதுமையான கதை சொல்லும் முறைகள், மற்றும் நவீன காட்சி அமைப்புக்கள் என, ஒரிஜினல் அனிமேஷன் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.
மேலும், டிஜிட்டல் உள்ளடக்கத்தை நோக்கிய புதிய மாற்றங்கள், இந்திய அனிமேஷன் துறையில் குறிப்பிடத்தக்க பரிசோதனை முயற்சிகளைக் கொண்டு வந்துள்ளன.
விளம்பரம், கேமிங் மற்றும் கல்வி போன்ற பல்வேறு அனிமேஷனுக்கான தேவை அதிகரித்துள்ளதால் திறமையான அனிமேட்டர்களின் தேவையும் ஏற்பட்டுள்ளது.
அனிமேஷன் துறையில், வளர நினைக்கும் இளம் அனிமேட்டர்களுக்கு தகுந்த ஆலோசனையையும், ஆதரவையும் இந்திய அரசு அளித்து வருகிறது.
அனிமேஷனுக்காக நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் போன்ற மத்திய அரசின் முயற்சிகள், உலக அளவில் போட்டியிட்டு வெல்ல இந்திய அனிமேட்டர்களை ஊக்குவிக்கிறது.
சர்வதேச அளவில் , தென்கொரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிகமான கேமர்கள் இருக்கின்றனர்.
இந்திய அனிமேஷன் சந்தையில் 40 சதவீதம் மும்பையும், 25 சதவீதம் பெங்களுரூவும், 20 சதவீதம் ஹைதராபாத்தும் , 10 சதவீதம் கொல்கத்தா மற்றும் சென்னையும் பங்களிக்கின்றன.
இந்திய அனிமேஷன் சந்தையானது பெரிய ஸ்டுடியோக்கள் முதல் தனிப்பட்ட திறமையான அனிமேட்டர் வரை பலதரப் பட்ட நிலையில் பரந்து விளங்குகிறது.
இந்தியாவைப் பொறுத்த வரை ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, கல்வி மற்றும் கல்வியாளர்கள் , ,கட்டிடக் கலை மற்றும் கட்டுமானத்துறை, சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல், ஆகிய துறைகளில் அனிமேஷனுக்கான வாய்ப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் அரசு துறைகளிலும் அனிமேஷனின் பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் இந்திய அனிமேஷன் துறையின் செல்வாக்கு சர்வதேச அளவில் வளரும் என்பது நிதர்சனமான உண்மை .