கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் சிறுவன் உயிரிழந்த நிலையில், இதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிபா வைரஸ் பரவல் எவ்வாறு நிகழ்கிறது? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
நிபா வைரஸ் ZOONOTIC DISEASE வகையைச் சேர்ந்தது. அதாவது கொரோனாவைப் போலவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவது. வெளவால்கள் சாப்பிட்ட பழங்கள் போன்றவற்றால் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. சுகாதாரமற்ற உணவை உட்கொண்டாலோ, பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருந்தாலோ வைரஸ் பரவும்.
நிபா பாதிப்பை, அறிகுறிகள் அற்ற தொற்று, கடுமையான சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும் தொற்று, மூளை அழற்சியை உண்டாக்கும் தொற்று என மூன்று விதமாக பிரிக்கிறார்கள்.
தொற்று ஏற்பட்டு 4 முதல் 14 நாட்களுக்கு பிறகே நிபா அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.
காய்ச்சல், தலைவலி, தசை வலி, இருமல், வாந்தி, தொண்டைப் புண் போன்ற அறிகுறிகள் முதற்கட்டமாக ஏற்படும்.
பின்னர் மயக்கம், தூக்கமின்மை, நரம்பியல் பிரச்னைகள், சுவாசப் பிரச்னை, மனநலப் பிரச்னை, நிமோனியா, கோமா உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.
அறிகுறிகள் இருப்போர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். காய்கள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். கிணறுகள், குகைகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
நோயாளிகளை பரிசோதிக்கும் சுகாதார அலுவலர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து 48 மணி நேரத்துக்குள் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம். தற்போதைய சூழலில் நிபா வைரஸை தடுக்க தடுப்பூசி இல்லை. அதே போல் இதற்கென்று தனியாக சிகிச்சைகளும் கிடையாது.