உலக பொருளாதாரம் சிறப்பாக இல்லாத சூழலிலும், இந்திய பணவீக்கம் தொடர்ந்து 4 சதவீதம் எனும் குறைந்த நிலையிலேயே நிலையாக நீடித்து வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 7-வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில், இந்த பட்ஜெட்டில் கல்வி, திறன் மேம்பாடு சிறு, குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 4.1 கோடி இளைஞர்களுக்கு 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்வி, திறன் மேம்பாட்டுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே உள்ள கல்வி நிறுவனங்களில் பயில 10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதிதாக பணியில் சேரும் ஈபிஎஃபோவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையாக அரசு தரப்பில் ஒரு மாதம் சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனால் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அதுமட்டுமல்லாமல் தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.