பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின் முதலாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று (23.07.2024) தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விகிதங்கள்: 2
புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு நிலைக்கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது.
அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை பூஜ்ய சதவீதம் என்ற விகிதம் மாற்றமின்றி தொடரும்,
ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரையும், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்திற்கு மேல் உள்ள வருமானத்திற்கு 30 சதவீதம் என வரி விதிக்கப்படுகிறது.
இது புதிய வருமான வரி முறையை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வேளாண்மைத் துறைக்கான திட்டங்கள்:
வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி விடுக்கப்படுகிறது.
விவசாயிகளால் சாகுபடி செய்வதற்கு பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய அதிக மகசூல் தரக்கூடிய, வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் 32 ரகங்கள் வெளியிடப்படும்.
இயற்கை வேளாண்மைக்கு அடுத்த இரண்டாண்டுகளில் நாடுமுழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை வேளாண்மைக்கு தேவை அடிப்படையிலான உயிரி இடுபொருள் மையங்கள் 10,000 உருவாக்கப்படும்.
விவசாயிகள் மற்றும் அவர்களின் நிலத்தை உள்ளடக்கிய டிஜிட்டல் பொது அடிப்படைக் கட்டமைப்பு திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
வரி விலக்குகள், வரி குறைப்புகள்:
புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது
பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது.
25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும்.
சூரிய எரிசக்தி உற்பத்திக்கான உபரி பாகங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்க பரிசீலிக்கப்படுகிறது.
கூட்டுறவுத் துறை:
கூட்டுறவுத் துறையில் அனைத்துத் தரப்பு வளர்ச்சி மற்றும் முறையான நடைமுறைகளுடன் கூடிய தேசிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படும். விரைவான கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற இலக்குகளுடன் கூடிய கொள்கை வகுக்கப்படும்
முன்னுரிமைத் திட்டங்கள்:
நாட்டின் முன்னேற்றத்திற்காக 9 முன்னுரிமைத் திட்டங்களை நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
வேளாண் துறையில் உற்பத்தித்திறனை அதிகரிப்பது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை குறித்து, ஒரு கோடி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும்.
ஐந்தாண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படும்.
1,000 தொழில் துறை பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகளிர் விடுதிகள், குழந்தை காப்பகங்கள் அமைக்கப்படும்.
பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் ஒருகோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.
விரைவில் 12 தொழில்துறை பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐந்தாண்டுகளில் ஒருகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 500 தொழில் பழகுநர் மையங்கள் உருவாக்கப்படும்.
தொழில் பழகுநர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்.
தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
முத்ரா கடனுதவி திட்டத்தின் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
100 உணவு தரநிலை மற்றும் பாதுகாப்பு பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
குறு,சிறு நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.
திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்திற்காக 10 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
வீட்டுவசதி திட்டத்தில் 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர்.
பத்திரப்பதிவு கட்டணத்தை திருத்தியமைக்க மாநிலங்கள் வற்புறுத்தப்படுத்தப்படும்
அடிப்படைக் கட்டமைப்பில் முதலீடு அதிகரிக்கப்படும்
உள்நாட்டு அனல்மின் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்
அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த ஜிடிபி-ல் 3.4 சதவீதம் ஒதுக்கப்படும்
எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் விரைவில் உருவாக்கப்படும்.
சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
சூரிய சக்தி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அணு சக்தி திட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு சிறிய அளவிலான அணு உலைகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு
உள்நாட்டு அனல் மின் நிலையங்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சுற்றுலா, அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு:
உலக அளவில் இந்தியாவை சுற்றுலா மையமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும்.
கயா மற்றும் புத்தகயாவில் உள்ள கோயில்கள் மேம்படுத்தப்படும்.
ஒடிசாவில் நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்கள் புனரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு
நாளந்தா பல்கலைக் கழகம் இருந்த இடம் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும்
வரி சீர்திருத்தங்கள்:
மின்னணு வர்த்தகத்திற்கான டிடிஎஸ் வரி விகிதம் தற்போதைய 1 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாக குறைக்கப்படும்.
குறுகிய கால மூலதன லாபங்கள் மீதான வரிவிகதம் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால மூலதன லாபத்திற்கான வரிவிகிதம் 12.5 சதவீதம்
புத்தொழில் நிறுவனங்களுக்கான ஏஞ்சல் வரி அனைத்து முதலீட்டு பிரிவினருக்கும் ரத்து செய்யப்படுகிறது.
விண்வெளி பொருளாதாரம்:
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்தல்
1000 கோடி ரூபாய் மூலதன நிதியில் விண்வெளி பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு நிதி:
ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, அம்மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க நடப்பு நிதியாண்டில் சிறப்பு நிதியுதவியாக பல்வேறு மேம்பாட்டு முகமைகள் மூலம் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும்.
விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடத்தில் கோப்பர்த்தியில் தொழில்முனையம் அமைக்கப்படும்
பீகார் மேம்பாட்டுத் திட்டங்கள்:
பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும்
பீகாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும்
பீகாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்திற்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பட்ஜெட்டில் தொகுப்பு நிதி ஒதுக்கீடு
பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25
கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த செலவினத் தொகை ரூ.48.21 லட்சம் கோடி.
நிகர வரிவருவாய் ரூ.25.83 லட்சம் கோடி.
நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.