அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ‘ஏஞ்சல் வரி’ ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர்,
இந்த நடவடிக்கை இந்திய ஸ்டார்ட்-அப் சூழலை மேம்படுத்துதல், தொழில்முனைவோர் உணர்வை ஊக்குவித்தல், புதுமைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
இந்தியாவின் வளர்ச்சித் தேவைகளுக்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரி விகிதத்தை 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைக்க முடிவெடுத்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
பொருளாதாரத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அளவு, திறன்களின் அடிப்படையில் துறையைத் தயார்படுத்துவதற்கும் நிதித் துறையின் தொலைநோக்கு ஆவணம் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
விமானங்கள் மற்றும் கப்பல்களை குத்தகைக்கு விடுவதற்கு நிதியளிப்பதற்கான திறமையான மற்றும் நெகிழ்வான முறையை வழங்குவதற்கு தேவையான சட்ட ஒப்புதலை எங்கள் அரசு பெறும் என்று அவர் கூறினார்.
அந்நிய நேரடி முதலீடுகளை எளிதாக்குவதற்கும், முன்னுரிமைப்படுத்துவதற்கும், வெளிநாட்டு முதலீடுகளுக்கான நாணயமாக இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும், அந்நிய நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.