மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மூலதன செலவிற்காக ரூ.11,11.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உள் கட்டமைப்புக்கான வலுவான நிதி ஆதரவை அரசு அளிக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.
உள்கட்டமைப்புக்கான நிதி ஆதரவுக்காக, மாநிலங்களுக்கு ஊக்கமளிக்க இந்த ஆண்டு 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வட்டியில்லா நீண்ட கால கடன் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த நிதி ஆதரவு, மாநிலங்கள் உள்கட்டமைப்புக்கான வளங்களை ஒதுக்கீடு செய்ய உதவும். உள்கட்டமைப்பில் தனியார் முதலீட்டின் மேம்பாடு குறித்து குறிப்பிட்ட சீதாராமன், சாத்தியமான நிதியுதவி, கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை மூலம் தனியார் துறையின் உள்கட்டமைப்பு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மக்கள் தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த 25,000 ஊரகக் குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ காலங்களிலும் போக்குவரத்துக்கு உகந்த வசதியை ஏற்படுத்துவதற்காக, பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சர் முன்மொழிந்தார்.
நீர்ப்பாசனம், வெள்ளப் பெருக்குத்தடுப்பு மேலாண்மைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு நிதி உதவிகளை அவர் அறிவித்தார்.