உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு தொடர்பான விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா தொடர்ச்சியாக குறுக்கீடு செய்ததால், தலைமை நீதிபதி அவரை அறையை விட்டு வெளியேறச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்றைய விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா, மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரேந்தர் ஹூடாவின் வாதத்தில் குறுக்கிட்டார்.
ஹூடாவின் வாதம் முடிந்ததும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியும், நெடும்பாரா தொடர்ந்து குறுக்கிட்டார்.
இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி, காவலர்களை அழைத்து அவரை அறையிலிருந்து வெளியேற்றும்படி கூறினார்.
அப்போது, தானே வெளியேறுவதாக நெடும்பாரா கூறிய நிலையில், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிடுவதை தன்னால் அனுமதிக்க முடியாது எனவும்,
தான் கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை பார்த்து வருவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போதும் குறுக்கிட்ட நெடும்பாரா, தான் 1979-ம் ஆண்டு முதல் நீதித்துறையை பார்த்து வருவதாகக் கூறினார்.
இதனையடுத்துநீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்தார்.
இதனால் நீதிமன்ற அறையை விட்டு வெளியேறிய நெடும்பாரா, சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்கு திரும்பினார். அப்போது தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கோரிய அவர், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் முறையிட்டார்.