எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஷ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஷ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களுடைய இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 மீனவர்களுக்கும் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.