நேபாள தலைநகர் காத்மாண்டுவில் விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்து சிதறியதில், 18 பேர் உயிரிழந்தனர்.
காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து போக்காரா நோக்கி, தொழில்நுட்பக் குழுவினருடன் செளரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. ஓடுபாதையிலிருந்து விமானம் புறப்பட்டதும் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், வெடித்து சிதறி கீழே விழுந்தது.
மேலும் விமானத்தில் தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததால், தகவலறிந்து வந்த மீட்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானம் உருக்குலைந்தது.
விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. விமானி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஞ்சிய நபர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.