பட்ஜெட் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பேசி, மக்களைத் தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கூறி, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
பட்ஜெட்டில் தங்கள் மாநிலத்துக்கு எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என பொதுமக்கள் கருத வேண்டும் என்பதற்காக தவறான தகவலை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் பரப்ப முயற்சிப்பதாக விமர்சித்தார்.
இதற்கு சில உதாரணத்தை எடுத்துக் கூறிய அவர், மகாராஷ்டிர மாநிலம் வடாவனில் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றும், அதேசமயம் பட்ஜெட்டில் மகாராஷ்டிரா என்ற சொல் இல்லை என்பதற்காக அந்த மாநிலத்தை முற்றிலும் புறக்கணித்ததாக அர்த்தமாகிவிடாது என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, நிர்மலா சீதாராமனின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.