பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான மாஸ்டர் மாதன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
நீலகிரி தொகுதியின் முன்னாள் எம்பியும், பாஜக மூத்த தலைவருமான மாஸ்டர் மாதன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மாஸ்டர் மாதன் நேற்றிரவு காலமானார்.
அவருக்கு வயது 93. மாஸ்டர் மாதனின் உடல் கோவையிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் மாதனின் மறைவை ஒட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜகவின் மூத்த முன்னோடியும், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்பியுமான மாஸ்டர் மாதன் நேற்றிரவு காலமானார் என்ற செய்தி வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார்.
மாஸ்டர் மாதன் தனது நற்குணங்களால் அனைத்து மக்களின் அன்பைப் பெற்று, சிறந்த முறையில் மக்களுக்கு சமூக சேவையாற்றி வந்ததாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். இந்த துயரமான சமயத்தில், மாஸ்டர் மாதனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நீலகிரி தொகுதியின் முன்னாள் எம்பியுமான மாஸ்டர் மாதன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார்.
தமிழகத்தில், பாஜகவின் வளர்ச்சிக்கும், நீலகிரி மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்ட மாஸ்டர் மாதன், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததாகவும் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது மறைவு, தமிழக பாஜகவுக்கு பேரிழப்பு என்றும், அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.