மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதனால், தங்கத்தில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு 10.74 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்குமா? என்பது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக மக்கள் கருதுவதால், உலகின் இரண்டாவது தங்கம் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது.
உலகளாவிய தங்கத்தில் 11 சதவீதம் இந்திய குடும்பங்களிடம் உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற பெரிய வளர்ந்த நாடுகள் மற்றும் IMF விட அதிகமான தங்கம் இந்திய குடும்பங்களில் தான் உள்ளன.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கு ரஷ்யா-உக்ரைன் போர்,சர்வதேச பண வீக்கம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு என பல காரணங்கள் சொல்லப்பட்டன.
இருந்தாலும், இந்தியாவில் தங்கம் விலை கூடியதற்கு மத்திய அரசின் 15 சதவீத இறக்குமதி வரியும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து, தங்கத்தின் விலை 14.7 சதவீதம் கூடியது. நடப்பாண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ள சென்செக்ஸை விடவும் தங்கத்தின் விலை கூடியது இதுவே முதல் முறை எனக் கூறப் பட்டது.
இந்நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப் பட்டது.
இதில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 10 சதவீதமாக இருந்த அடிப்படை சுங்க வரியை 5 சதவீதமாகவும், ஏஐடிசி (AIDC) எனப்படும் வரி 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு, மொத்தமாக 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி உட்பட ஒட்டுமொத்த வரிகளை சுமார் 18.5 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
இந்த வரி குறைப்பால் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கடத்துவது குறையும் என்று கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த உடனேயே, தங்கதின் விலை சவரனுக்கு 2,200 ரூபாய் குறைந்ததை பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர்களும் வரவேற்றிருந்தனர்.
என்றாலும் தங்கத்தின் மீதான வரி குறைப்பு நிலைமையை வேறுவிதமாக மாற்றி அமைத்திருக்கிறது.
இந்திய குடும்பங்கள், கோயில்கள் வசம் மட்டும் 30 ஆயிரம் டன் தங்க நகைகள் உள்ளன. இதன்படி, ஜூலை மாதம் 22 ஆம் தேதி அதன் மதிப்பு 218.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மத்திய பட்ஜெட்டில் வரி குறைப்பு என்று அறிவிப்பு வந்தவுடன், பிறகு இந்திய குடும்பங்களில் உள்ள தங்கத்தின் மதிப்பு 207.89 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.
இந்நிலையில் தங்க விலை சரிவு, அதில் முதலீடு செய்திருந்த குடும்பங்களுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. தங்கத்தின் மீது முதலீடு செய்திருந்த பொதுமக்களுக்கு ரூ.10.74 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் MCX என்ற தங்கம் கிட்டத்தட்ட 5.2 சதவீதம் குறைந்திருக்கிறது.
விலைமதிப்பற்ற உலோகமான தங்கத்தின் மதிப்பைக் குறைத்த நடவடிக்கையால் தங்க முதலீட்டாளர்கள், தங்க வணிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடையவில்லை. அதன் காரணமாக தங்க முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று, லாபத்தைப் பெறத் தொடங்கினர்.
குறைந்த கடன்-மதிப்பு (LTV) விகிதத்தின் அடிப்படையில், கடன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் தங்கத்தின் மதிப்பு, வழங்கப்பட்ட மொத்தக் கடன்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதால் நிறுவனங்களின் பாதுகாப்பின் அளவும் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கூடுமா ? என்ற கேள்விக்கு சாதகமான பதிலே தரப்படுகிறது. பலவீனமான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதும், பண்டிகைக் காலங்கள் வருவதும் , அமெரிக்கத் தேர்தல் நடப்பதும் , புவிசார் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதும், ரிசர்வ் வங்கிக் கொள்கை முடிவுகள் மாறுவதும் தங்கத்தின் விலையை மீண்டும் உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.