ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், மதுரையில் ஒரே கையெழுத்துடன் இருவேறு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்ற விவகாரத்தில், நான்கு அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. விடைத்தாள் திருத்தப்பட்டபோது மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், விடைத்தாள்களை ஒருங்கிணைக்கும் முகாமில் இந்த முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அந்த வகையில், மதுரை மாவட்ட கல்வி அலுவலக முதுநிலை கணினி ஆசிரியர் பரமசிவம், கண்காணிப்பாளர் பிரபாகரன், ஆய்வக உதவியாளர்கள் கண்ணன், கார்த்திக் மற்றும் மாணவரின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 40 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்தியுள்ளனர்.