வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான செய்தியறிந்து வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய் இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். மீட்புப்பணிகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசியதாகவும், மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்பதை உறுதி செய்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நிலச்சரிவு தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
வயநாடு தொகுதியின் முன்னாள் எம்பியான ராகுல்காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேப்பாடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவு மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவ வேண்டுமென ஐக்கிய ஜனநாயக முன்னணி தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும், ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.