தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் கொலை சம்பவங்களை தடுக்க பாஜகவிடம் ஒருநாள் ஆட்சியை கொடுத்து பாருங்கள் என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை சௌகார்பேட்டையில் நடைபெற்ற பாஜக பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில், பாஜக மாநில செயலர் வினோஜ் பி செல்வம் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர்,
5 சதவிகித வாக்குகள் பெற்ற பாஜக, இதே மத்திய சென்னையில் 24 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் திமுகவை தட்டி கேட்கும் உரிமை பாஜகவுக்கு வந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களுக்கு எழுந்துள்ளது. வாக்களித்தவர்களுக்கு உண்மையாக நிற்க வேண்டியது எங்களது கடமை.
டாஸ்மாக் இல் விற்கக்கூடிய சரக்கும், திராவிட முன்னேற்ற கழகமும் ஒன்று தான். மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் என்பார்கள், சிறு நேர போதை எப்படியோ அதே போல சிறிய நாட்களுக்காக, சிறு சிறு போதை மூலம் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது திமுக.
முன்பெல்லாம் வானிலை செய்திகளை தினசரி தொலைக்காட்சிகளில் பார்ப்பது போல, இப்போதெல்லாம் கொலை செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது. கொலை சம்பவங்களை தடுக்க முடியாவிட்டால் ஒருநாள் பிஜேபியிடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள் என பேசினார்.
முதல்வருக்கே சட்டம் ஒழுங்கு எப்போது கெட்டுவிட்டது என்று தெரியும் என்றால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அடுத்து தான். திமுக தலையீடு இல்லாமல் இருந்தாலே தமிழக காவல்துறை அவர்களது வேலையை சிறப்பாக செய்து விடுவார்கள்.
திமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு கொடுத்த பரிசு கள்ளக்குறிச்சியில் 70 பேரை உயிர் காவு கொடுத்தது தான். இந்த சம்பவம் உண்மை நிலை தெரிந்தால் முதலில் சிறையில் இருக்கக்கூடிய நபர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் தான்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் எல்லா வீட்டிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு அவரைப் பார்த்தால் தான் தைரியம் வருகிறது போல..
திமுகவினர் பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இல்லை என ஒரு ஆர்ப்பாட்டம் அறிவிக்கிறார்கள், பட்ஜெட் கோப்பில் எத்தனை பக்கங்கள் இருக்கிறது என்பது தெரியுமா? இந்த கேவலமான ஆட்சியை மறைப்பதற்காக பட்ஜெட்டை குறை கூறி கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தாய் தனது குழந்தைக்கு என்ன தேவை என்பதை செய்து கொடுப்பானோ அது போல தான் மத்திய பாஜக காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நலம் பெற வேண்டி அனைத்தையும் செய்து வருகிறது.
பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலனுக்கு 3 லட்சம் கோடி, கிராமப்புற வளர்ச்சிக்காக 2 லட்சம் கோடி என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலம் உத்திரபிரதேசம் அதன் பெயர் பட்ஜெட்டில் எங்காவது இருக்கிறதா என்பதை பார்த்து சொல்ல வேண்டும்.
புதிய மருமகள் எப்படி வீட்டில் இருந்து கணவனை பிரித்து செல்வார்களோ, அதே போல இந்தியாவிடம் இருந்து தமிழ்நாட்டை திமுக பிரித்து செல்கிறது. தமிழை வைத்து ஆட்சி செய்ய வந்தவர்கள் நீங்கள் ஆனால் வருடம் முழுவதும் 50,000 மாணவர்கள் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்து வருகிறார்கள்… கையில் கயிறு கட்டாமல் இருந்தால் சமூக நீதியை கடைபிடித்து விடலாமா? எனக் கேள்வி எழுப்பினார்.
கம்யுனிஸ்ட் சித்தாந்தம் என்பது இந்து மதத்திற்கு எதிரான சித்தாந்தம், அதை தான் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் சந்துரு… தலித் மக்களுக்கு எதிரான ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது, நாளுக்கு நாள் தலித் தலைவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் எனத் தெரிவித்தாார்.