பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பதக்கம் வென்று 141 கோடி மக்களின் பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே. ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக இருந்த அவர், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டியது எப்படி? மகேந்திர சிங் தோனியுடன் தொடர்பு என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…!
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் உலகின் முன்னணி விளையாட்டு வீரர்களுக்கே டப் கொடுத்து வருகின்றனர் இந்திய வீரர்கள். இதனை நிரூபிக்கும் வகையில், துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர்கள் 3 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளனர். மகளிர் ஒற்றையர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் மனு பார்க்கர். இதன் மூலம் 141 கோடி மக்களின் பெருமைக்கு சொந்தக்காரர்களாக மனு பார்க்கர் திகழ்ந்து வருகிறார்.
இதேபோல் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகளில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், தகுதி சுற்றிலேயே அசத்தினார் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே. தன் மீதான அசாத்திய நம்பிக்கையால், இறுதிப் போட்டியில் 451.4 புள்ளிகள் பெற்று, வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கான 3வது பதக்கம் உறுதி செய்யப்பட்டதுடன், நடப்பாண்டு ஒலிம்பிக் வரலாற்றிலேயே 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையயும் அவர் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகே உள்ள கம்பல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் தான் 29 வயது இளைஞர் ஸ்வப்னில். ரயில்வேதுறையில் டிக்கெட் பரிசோதகராக இருந்த இவர், தனது ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் போராடி வந்துள்ளார்.
அவரது விடா முயற்சி தான், 2015ல் குவைத்தில் நடைப்பெற்ற ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றதுடன், ஆசிய சூட்டிங் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
அதேபோல் 2017ல் பிரிஸ்பேனில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2021ல் டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை ஷூட்டிங் போட்டியில் தங்கம், 2022 ஹாங்சோ வில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம், அதே வருடம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2023 ஆசிய சூட்டிங் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பெற்று அசாத்திய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக மூன்றாவது பதக்கத்தை கைப்பற்றிய பிறகு ஸ்வப்னில் குசாலே பேசியது தற்போது வைரலாகி உள்ளது. ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இருந்து, இன்று உலகம் போற்றும் நபராக சாதித்திருப்பதற்கு, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை தனது முன்னோடியாக எடுத்துக்கொண்டு தான் என்கிறார் ஸ்வப்னில் குசாலே.
விவசாய குடும்பத்தில் பிறந்த ஸ்வப்னில் குசாலே, தான் வாங்கிய முதல் ஒலிம்பிக் பதக்கத்தை தனது பெற்றோரிடம் வழங்கி கௌரவப்படுத்தி உள்ளார். தனது இளம் வயதில் சோதனைகளை சாதனையாக்கி வரும் ஸ்வப்னில் குசாலே, மென்மேலும் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.