முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் விநாயகப் பெருமானுக்கும் ஆறு படைவீடுகள் உள்ளன. அவற்றில் ஐந்தாவது படை வீடாக விளங்குவது தான் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் ஆகும். கற்பக விநாயகர் திருக்கோயிலைப் பற்றித் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
விநாயகப் பெருமானுக்கு உரிய மிக பெரிய குடைவரைக்கோயிலான இந்த பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது.
காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்ற பெயர் வருவதற்கு காரணமே இந்தக் கற்பகவிநாயகர் திருக்கோயில் தான்.
பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான பழமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயிலாகும். கி.பி. 4ம் நூற்றாண்டில் இந்த பிள்ளையார் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என தெரிய வருகிறது.
1,600 ஆண்டுகள் பழமையான இக்கோயில், ஒரு குடைவரைக் கோயிலாக, பாறையைக் குடைந்தெடுத்து அமைக்கப்பட்டிருக்கிறது. கற்பக விநாயகருக்கு முன்னே இடப் பக்கத்தில் கிழக்கு நோக்கி திருவீசர் எனும் சிவலிங்கம் உள்ளது. இந்த திருவீசரைத் தான் கற்பக விநாயகர் அனுதினமும் பூஜை செய்து வருகிறார் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.
கற்பக விநாயகரைப் போலவே, அந்தக் கருவறையைப் போலவே இந்த சிவலிங்கமும் மலைக் குன்றிலிருந்து வடித்து எடுக்கப்பட்டது என்று கூறப் படுகிறது.
இந்தக் கோயிலுக்கு உள்ளே சென்றதும் மிக உயர்ந்த கொடிமரம் அமைந்திருக்கிறது. இடது பக்கத்தில் கற்பக விநாயகர். எங்கு நின்று பார்த்தாலும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்படி மரப்பலகை மேல் நின்று கற்பக விநாயகரைத் தரிசிக்க முடிகிறது.
எல்லா விநாயகர் கோயில்களிலும், விநாயகப்பெருமான் தும்பிக்கை தவிர நான்கு கைகளுடன் இரு காட்சியளிப்பார். ஆனால் இந்த கற்பக விநாயகர் இரண்டு திருக் கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
6 அடி உயரத்தில், பெரிய கரிய, உருவத்தில், அகன்ற காதுகளுடன் அழகான ஆனைமுகத்துடன் கால்களைப் பாதியாய் மடித்து, ஆசனத்தில் வயிறு படியாமல் அமர்ந்திருக்கும் அர்த்த பத்மாசனம் எனும் திருக்கோலத்தில் தங்கக் கவசத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் இந்த கற்பக விநாயகர்.
கற்பக விநாயகர் தனது வலது கையில் சிவலிங்கம் வைத்திருக்கிறார். இது வேறெந்த திருக்கோயில்களிலும் எங்கும் காணக் கிடைக்காத அற்புத ஞானக் கோலமாகும். தும்பிக்கையில் மோதகம் ஏந்தியும், இடது கரத்தை மடித்து கடிஹஸ்தமாக இடுப்பில் வைத்து பெருமிதக் கோலத்தில் இந்த கற்பக விநாயகர் காட்சி அளிக்கிறார்.
கற்பக விநாயகரின் முன்னே இடப்புறம் நான்கு சர விளக்குகளும், வலப்புறம் நான்கு சர விளக்குகளும், நடுவில் ஒரு சரவிளக்கும் என்று மொத்தம் 9 சர விளக்குகள் ஒளிவீசுகின்றன. நவக்கிரகங்களைக் குறிக்கும் இந்த சரவிளக்குகள் அமைந்திருப்பதால், கற்பக விநாயகரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்று சொல்லப் படுகிறது.
இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்
இந்த தேசி விநாயகருக்கு முன்னே 16 தீபங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாய் ஒளிவிடும் பாதவிளக்கும் அமைந்திருக்கிறது.
எனவே, இந்த கற்பக விநாயகரின் திருவடியில் விழுந்து வணங்கினால், 16 வகையான செல்வங்களுக்கும் அதிபதி ஆவது உறுதி என்பது பக்தர்கள் நம்பிக்கை.
ஆவணி மாதத்தில் வரும் விநாயகா் சதுா்த்தி விழாவே இந்தக் கோயிலின் முதன்மையான திருவிழா ஆகும். ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலாகலத்துடன் வெகு சிறப்பாக 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 9 ஆம் நாள், தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி ராக்ஷச கொழுக்கட்டை கற்பக விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப் படுகிறது. மேலும் மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், கற்பக விநாயகருக்கு முக்குறுணி மோதகம் படைத்து நன்றி செலுத்தி வழிபடுகிறார்கள்.
இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து கற்பக விநாயகரை வழிபட்டால் தொழில் வளர்ச்சி அடையும் என்பதால் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து கணபதி ஹோமம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.
விநாயகர் சந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாக சென்று வழிபட்டு முடித்துவிட்டு, கிழக்கு பக்கம் இருக்கும் ராஜகோபுர வாசல் வழியாக வெளியே வரவேண்டும் என்ற நியதி இக்கோயிலில் கடைப் பிடிக்கப் படுகிறது.
அள்ளி அள்ளித் தரக்கூடிய அருள் வள்ளல் இந்தக் கற்பக விநாயகரை நாமும் வணங்கி நலம் பெறுவோம்.