அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிராக மிகவும் கடுமையான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறார். அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிய பின் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளார்.
இப்போதே ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரம் புத்துயிர் பெற்றுள்ளது. கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் என்றதுமே ஜூலை மாதத்தில் சாதனையளவாக 310 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையாக வந்து குவிந்தது. இந்த நன்கொடை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கிடைத்த நன்கொடையை விட இருமடங்காகும்.
அமெரிக்க தேர்தலை முடிவு செய்யக்கூடிய பல மாநிலங்களில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கறுப்பரின வாக்காளர்கள் குறைந்தபட்சம் 10 சதவீதமாக உள்ளனர்.
பென்சில்வேனியா முதல் மிச்சிகன், புளோரிடா வரை மற்றும் ஜார்ஜியா மற்றும் வட கரோலினா ஆகிய மாநிலங்களிலும் கறுப்பரின வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர்.
எனவே கறுப்பின அமெரிக்கர்களின் ஆதரவில் சிறிய மாற்றம் கூட அமெரிக்க தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.
இந்நிலையில் சிகாகோ நகரில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்க மாநாட்டில் பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், கமலா ஹாரிஸ் மீது இனவெறி கருத்தை வெளியிட்டிருந்தார்.
கமலா ஹாரிஸ் இந்தியரா அல்லது ஆப்பிரிக்கரா என்று தனக்கு தெரியவில்லை என்றும், வெளிப்படைதன்மை உடையவராக கமலா ஹாரிஸ் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கறுப்பரின மக்களுக்கான சிறந்த அதிபராக தாம், கறுப்பரின மக்களை அதிகமாக நேசிப்பதாக பிரச்சாரம் செய்திருந்தார்.
கமலா ஹாரிஸ் மீதான டிரம்பின் இந்த குற்றச்சாட்டிற்கு அமெரிக்காவின் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் கண்டனங்கள் வந்துள்ளன.
குறிப்பாக , பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு தங்க பதக்கம் வென்றிருக்கும் ஜிம்னாஸ்டிக் வீரர் சிமோன் I LOVE BLACK JOB என்று தமது அடையாளத்தை டிரம்புக்கு எதிராக பதிவுசெய்திருக்கிறார்
சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகளை உண்டாக்கும் விதமாக, கமலா ஹாரிஸின் குடும்பப் புகைப்படம் ஒன்றை இணையத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அதில் புகைப்படத்திற்கு நன்றி என்றும், இந்திய மக்கள் மீதான அன்பு பாராட்டுக்குரியது என்றும் கமலா ஹாரிஸ் குறித்து பதிவிட்டிருந்தார்.
சமீபத்தில் நடந்த அமெரிக்க தேசிய வாக்கெடுப்பின்படி, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட கறுப்பரின வாக்காளர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கே ஆதரவாக உள்ளனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
முதல் கறுப்பின அதிபரான பராக் ஒபாமா, 2012ம் ஆண்டு தனது சொந்த முயற்சியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான கறுப்பரின வாக்காளர்களை கவர்ந்து வெற்றி பெற்றார்.
இப்போது கமலா ஹாரிஸுக்கு 78 சதவீத கறுப்பரின வாக்காளர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது என்று கூறப் படுகிறது. மாறாக, டிரம்ப்புக்கு 15 சதவீத ஆதரவே உள்ளது.
மொத்த தகுதி பெற்ற அமெரிக்க வாக்காளர்களில் 14 சதவீதம் கறுப்பரின வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து ட்ரம்ப் சர்ச்சைக்கு உரிய கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவது அவருக்கு எதிராகவே போய் முடியும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.