அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, புதிய உத்தியுடன் மீண்டும் இந்திய சந்தையில் நுழைய பரிசீலனை செய்து வருகிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய கார் ரசிகர்களுக்கு அமெரிக்காவின் ஃபோர்டு கார்கள் மீது தனி மதிப்பும் ஆர்வமும் இருக்கிறது.
1990-களிலிருந்து ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகள் அமைத்து கார்களைத் தயார் செய்து விற்பனை செய்து வந்தது. ஃபோர்டு கார்களுக்கு, இந்தியாவில் நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது.
ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் முதலீடு செய்திருந்தது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மினி-எஸ்யூவி மற்றும் ஃபிகோ என்ற நடுத்தர வகை கார்கள் அதிகமாக விற்பனையாயின.
இதற்கு முன்னர் சென்னை மறைமலை நகரில் உள்ள தனது ஆலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களை தயாரிப்பது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கார்களையும் ஃபோர்டு நிறுவனம், உற்பத்தி செய்து வந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, போதிய அளவு விற்பனை இல்லை என்ற காரணத்துக்காக அந்த ஆலையை மூடிவிட்டு இந்தியாவில் இருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறியது. இது ஃபோர்டு கார் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
குஜராத் மாநிலத்திலும் ஃபோர்டு நிறுவனத்துக்கு ஒரு ஆலை இருந்தது. ஆனால் அந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கி தனது டாடா கார்கள் உற்பத்தி மையமாக வைத்திருக்கிறது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்கு வருமா வராதா என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கு விற்பனை செய்ய போடப்பட்ட ஒப்பந்தம் ரத்தானது
இதன் எதிரொலியாக, ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தனது காலடித்தடத்தை எடுத்து வைக்கிறது என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கின.
இதன் முதல் கட்டமாக ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரிக்காமல் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தனது கார்களை, இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.
அதன்படி முதல் காராக எண்டியூரோ காரை அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு கொண்டுவர இருப்பதாகவும், தொடர்ந்து ஃபோர்டு மாஸ்டாக் மெக்-இ என்ற மின்சார காரையும் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த இரண்டு கார்களின் காப்புரிமைக்காக ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில் போர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவுக்குள் களமிறங்குவது உறுதியாகி உள்ளது.
ஃபோர்ட் மாஸ்டாக் காரை பொருத்தவரை இந்தியாவில் ஆடி க்யூ8 இ-டிரான், மெர்சிடிஸ் இக்யூஇ மற்றும் பல்வேறு கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை நிச்சயம் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கத்திய சந்தைகள் தேக்கமடைந்து வருவதால், எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான சந்தையாக இந்தியாவை ஃபோர்டு நிறுவனம் பார்ப்பதாக ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் பார்லி தெரிவித்திருக்கிறார்.
மேலும், சீனா மற்றும் ஐரோப்பாவின் சந்தைகள் நல்ல வாய்ப்பாக இல்லாத நிலையிலும் இந்தியா வளர்ச்சிக்கான மையமாக இருப்பதாலும், இந்திய சந்தைக்குள் நுழையவே விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மீண்டும் இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் களமிறங்கி தனது ஆலையைத் தொடங்கினால் நிச்சயம் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றும், ஆனால் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காரை இறக்குமதி செய்து மட்டுமே விற்பனை செய்தால் அதிக விலையில் உள்ள கார்களை மட்டுமே விற்பனை செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.