நிதி மோசடிகள் காரணமாக அடுத்த 90 நாட்களுக்குள் 400க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களை இந்திய அரசு முடக்கும் என்று தெரிய வருகிறது. மேலும், 600-க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் மீதும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன், சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம், சீன நிறுவனங்களுடன் வணிகம் செய்ய விரும்பும் இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான புதிய வர்த்தக ஆலோசனை வெளியிட்டிருந்தது
மேலும், இந்த ஆலோசனையையும் அதன் இணைப்பு ஆவணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், சீன நிறுவனங்களுடன் கையாளும் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , இந்திய நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது.
சீன நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வதற்கு முன் தங்களை கலந்தலோசிக்குமாறு கூறியிருந்த சீனாவுக்கான இந்திய தூதரகம், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையாக இருக்கும் படியும் இந்திய நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கிறது. இதன் காரணமாகவே, டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயலிகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான, டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள், சீன நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன.
எளிதாக கடன் வழங்கும் திட்டம் போன்ற வசீகரமான திட்டங்களால் சிக்க வைத்து, இந்திய மக்களை ஏமாற்றுவதில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
மேலும் இந்த நிறுவனங்கள், அதிகப்படியான வட்டி விகிதங்களைச் செலுத்த முடியாத மக்களைத் துன்புறுத்துவது போன்ற நெறிமுறையற்ற நடைமுறைகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்திய மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட வந்த கிட்டத்தட்ட 600 சீன நிறுவனங்கள் மீதான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், டெல்லி, பெங்களூரு, உத்தரபிரதேசம், ஆந்திரா, மும்பை, சென்னை உள்ளிட்ட 17 மாநிலங்களில் செயல்பட்டு வந்த சுமார் 400 சீன நிறுவனங்களின் பதிவு மற்றும் உரிமம் அடுத்த 90 நாட்களுக்குள் செயற்பாட்டில் இருந்து நிறுத்தப் பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கொள்ளையடிக்கும் கடன் நடைமுறைகளுடன், அரசின் நிதி விதிமுறைகளை மீறி மோசடியில் ஈடுபட்டு வந்த சுமார் 700 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவையும் இழுத்து மூடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய நிறுவனங்கள் இந்திய அரசிடம் பதிவு செய்யப்படாத நிறுவனங்களாகும். சீனாவில் இருந்து முதலீடுகள் பெற்ற ஒரு சில நிறுவனங்கள் எந்த காரணத்துக்காக அனுமதி பெற்றதோ, அதை மீறி வேறு மோசடி தொழிலையும் செய்து வருகின்றன.
இந்த மாதிரியான சில நிறுவனங்களில் இந்திய இயக்குநர் இருந்தாலும் , நிறுவனத்தின் வங்கிக் கணக்கு சீனாவிலிருந்து இயக்கப்படுகிறது என்றும் மத்திய அரசின் விசாரணையில் தெரிய வந்துள்ளன.
மொபைல் பாகங்கள் தயாரிப்பாளர்கள்,பேட்டரி உற்பத்தியாளர்கள் மற்றும் மொபைல் ஸ்கிரீன் தயாரிப்பாளர்கள் போன்ற மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் உட்பட மேலும் 40 சீன நிறுவனங்கள் மீது விசாரணைக்கு மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் நிதி போன்ற துறைகளில் சீன நிறுவனங்களுடன் கையாள்வதில் இருக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நிதி மோசடியில் ஈடுபடும் சீன நிறுவனங்கள் மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்திய தேசிய எல்லைகளுக்குள் செயல்படும் அயல் நாட்டு நிறுவனங்கள் மீது மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.