பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிரான நடுவர்களின் முடிவு ஒருதலை பட்சமாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம்..!
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி விளையாட்டு போட்டியில் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. ஒலிம்பிக் தொடர்களில் ஹாக்கி விளையாட்டில் இந்திய அணியின் ஆதிக்கம் எத்தகைய சாதனைகளை படைக்கச் செய்திருக்கிறது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஒரு சிறந்த அணியால் கடந்த கால பெருமைகளை தக்க வைத்துக்கொண்டு பயணிப்பது அவ்வளவு எளிதல்ல. காலம் மாறும், வரலாறுகள் திருத்தி எழுதப்படும். ஆனால் இந்திய ஹாக்கி அணியானது, ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் வீர நடைப் போட்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டி குரூப் சுற்றுகளில் நியூசிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றியும், அர்ஜென்டினா அணியுடனான போட்டியில் டிராவும் செய்தது இந்திய அணி. இதில் 1972 முனிச் ஒலிம்பிக் தொடருக்கு பிறகு, ஆஸ்திரேலியா அணியுடனான வெற்றி என்பது, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, காலிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த தொடரில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் போட்டியை ரசிகர்களின் கண்களுக்கு இரு அணிகளும் விருந்தாக்கின. ஆட்டத்தின் இரண்டாவது காலிறுதி பாதியிலேயே எதிர்பாராத விதமாக இந்திய வீரர் அமித் செய்த பவுல் காரணமாக அவருக்கு அதிரடியாக ரெட் கார்டு வழங்கப்பட்டது.
அதிர்ச்சியில் உறைந்தது ரசிகர்கள் மட்டும் அல்ல, இந்திய அணியும் கூட… ஏணென்றால் ரெட் கார்டு வழங்கப்பட்டால் அந்த போட்டி முழுவதுமாக ரெட் கார்டு வாங்கிய வீரர் விளையாட இயலாது. அமித் வெளியேறிய மறு நொடியே 10 வீரர்களுடன் மட்டுமே களத்தில் போராடியது இந்தியா…
இருப்பினும் அந்த குவாட்டரிலேயே கிடைக்கப்பெற்ற பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கோல் அடித்தார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே இங்கிலாந்து அணியும் கிடைத்த வாய்ப்பை கோல் ஆக்கியது. 1-1 என்ற கோல் கணக்கிலேயே மீதம் இருந்த 2 குவாட்டர்களை இரு அணிகளும் நிறைவு செய்யவே போட்டி சமணில் முடிந்தது.
10 வீரர்களை கொண்டு போட்டியை டிரா செய்த இந்திய அணியை ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர். குறிப்பாக இந்திய அணியின் கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ் இங்கிலாந்து அணியின் இரண்டு அட்டாக்குகளை சரியாக தடுத்ததன் மூலம், இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாக இந்த போட்டி டிராவில் முடிந்தது. இறுதியாக பெனால்டி ஷூட்அவுட் முறையில் இந்தியா 4 கோல்கள் அடித்தது, ஆனால் இங்கிலாந்து முதல் இரண்டு வாய்ப்புகளை கோல் ஆக்கி, மீதம் இரண்டு வாய்ப்புகளை தவற விட்டது.
இதனால் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 கோல் கணக்கை சேர்த்து, 2-1 என்ற வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியுடனான போட்டி, தொடக்கம் முதலே பல சர்சைகளால் சூழப்பட்டது
இந்திய வீரர் அமித்துக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது, இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்கியது மற்றும் மூன்றாம் நடுவரின் முடிவுகளில் திருப்தி இல்லாமல் இருந்தது என பல சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், இந்திய ஹாக்கி கூட்டமைப்பு, நடுவர்களின் முடிவுகளில் திருப்தி இல்லை எனவும், மூன்றாம் நடுவர் ரெட் கார்டு மீது எடுத்த முடிவு ஏற்கத்தக்கதல்ல எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், பெனால்டி ஷூட் அவுட்டின் போது இங்கிலாந்து கோல் கீப்பரை பின் பகுதியில் இருந்து பயிற்சியாளர் வழி நடத்தியதாகவும், பெனால்டி ஷூட்டவுட்டின் போது கோல் கீப்பர் வீடியோ டேப்லெட் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். இனி வரும் போட்டிகளில் நடுவர்களின் தரம் சிறந்ததாக இருக்க வேண்டும் எனவும், ஒருதலை பட்சமாக செயல்பட கூடாது எனவும், சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது இந்தியா…
ஒலிம்பிக் தொடர்களில் பொதுவாகவே இந்திய ஹாக்கி அணி முடிசூடா மன்னர்களாக திகழ்ந்தவர்கள் தான்.
1928 முதல் 1956 வரை 6 தங்கம், 1960 இல் வெள்ளி, 1964இல் ஆம் 7 வது தங்கம், 1968 மற்றும் 1972 ஆகிய வருடங்களில் வெண்கலப் பதக்கம், 1980ல் 8வது தங்கம், 2020-ல் வெண்கலம் என வலுவான பயணத்தை யாரும் மறக்க முடியாது. இந்திய அணியின் கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எனவே அவருக்கு தங்கப் பதக்கத்தை பரிசாக கொடுக்க ஒட்டுமொத்த இந்திய அணியும், ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றன. இனி அரையிறுதியில் அடுத்த அடி எடுத்து வைத்துள்ள இந்தியா, வெற்றி பெற்று 1980க்கு பிறகு இறுதிப் போட்டிக்கு சென்று 44 ஆண்டுகள் கழித்து தங்கம் வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்திய அணியும் அதனை நிறைவேற்றும் என நம்புவோம்.