இன்று கொண்டுவரப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத்திருத்தம் அனைத்து இஸ்லாமிய சமூக மக்களுக்கு பலனுள்ளதாக அமையும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை ஏனவும் இந்த சட்டதிருத்தத்தை தமிழக பாஜக முழுமையாக வரவேற்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வக்பு வாரியச் சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விரிவாக பதிலளித்தார்.
முதலில், வக்பு வாரியச் சட்ட திருத்தத்தில், சட்டப்பிரிவு 25 முதல் 30 வரை உள்ள மதம் சார்ந்த அமைப்புகளின் சுதந்திரம் குறித்த சட்டபிரிவுகளில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. நமது அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவும் மீறப்படவில்லை என அமைச்சர் திட்டவட்டமாக கூறினார்.
பிரம்மச்சாரி மற்றும் மேற்கு வங்காள அரசு ஆகியோர் சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 25,26ன் கீழ் வக்பு வாரியம் இடம் பெறாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. யாருடைய உரிமையையும் பறிக்க இல்லை, யாருக்கு உரிமை கிடைக்கவில்லையோ அவர்களுக்கு உரிமையை வழங்கவே இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், பெண்கள், சிறுவர்கள், இஸ்லாமிய சமூகத்தில் பின்தங்கிய, இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்காத இஸ்லாமியர்களுக்காக, இந்த மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது.
அரசியலமைப்பின் பொது பட்டியல், உள்ளீடு எண் 10 மற்றும் 28 ஆகியவற்றின் படி இந்த விஷயம் பொது பட்டியலில் இருப்பதால், சட்டமியற்ற இந்த நாடாளுமன்றத்திற்கும், இந்திய அரசுக்கும் அதிகாரம் உள்ளது.
வக்பு வாரியச் சட்டத்திருத்த மசோதா இந்த அவையில் முதல்முறை கொண்டுவரப்படவில்லை. சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக, 1954 ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு சட்டத்தில் பலமுறை திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 1995 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்பு வாரியத் திருத்தச்சட்டத்தில் 2013 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்து வக்பு வாரியத்தின் சட்டதிருத்தத்தால் வக்பு வாரியம் மூலம் பலன் கிடைக்கும் என்று நினைத்த மக்களின் நம்பிக்கை அனைத்தும் தலைகீழாக மாறியது.
அதனால் தான், இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியால் எதை செய்யமுடியவில்லையோ அதை செய்து முடிக்கவே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 1976 ஆம் ஆண்டு வக்பு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து வக்பு வாரியங்களும் முத்தாவலிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது. அதை ஒழுங்குபடுத்த முறையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
வக்பு குறித்து பல வழக்குகள் வருவதால், ஒரு ஆணையம் கொண்ட முறை அமைக்கப்படவேண்டும். வக்பு வாரியங்களில் தணிக்கை மற்றும் கணக்குகள் சரிவர இல்லை. அதை முறைப்படுத்தவேண்டும் என மூன்று முக்கிய பரிந்துரைகள் கூறப்பட்டன. அவை நிறைவேற்றப்படாமல் நிலுவையிலே உள்ளது.
அதன்பிறகு, இரண்டு குழுக்களை பற்றி கூறவேண்டும், இவ்விரண்டு குழுவும் காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டது தான். முதலில், 9 மார்ச், 2005-ல் நீதிபதி ராஜிந்தர் சச்சர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் நலனுக்காக இந்த குழு அமைக்கப்பட்டது.
சச்சர் குழுவின் அறிக்கையில், 4.9 லட்சம் பதிவு செய்யப்பட்ட வக்பு சொத்துகள் மூலம் ஆண்டிற்கு வெறும் ரூ.163 கோடி வருமானம் தான் கிடைப்பதாக கூறியது. இதை நியாயப்படுத்தவே முடியாது. இதை சரிவர முறைப்படுத்தி, சந்தை மதிப்பின்படி சொத்துக்களை நிர்வகித்தால் அந்த நேரத்தில் ரூ.12,000 கோடி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், வெறும் ரூ.163 கோடி மட்டுமே வருமானம் கிடைத்து வந்தது.
WAMSI (Waqf Management System of India) தளத்தில் இருக்கும் மொத்தம் 8,72,320 வக்பு வாரிய சொத்துக்களின் மதிப்பு சச்சர் குழு கூறிய மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். சச்சர் அறிக்கையில், தற்போது உள்ள வக்பு வாரியத்தை விரிவாக்கம் செய்யவேண்டும். வக்பு வாரியத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், 2 பெண்கள், மத்திய வக்பு வாரிய மன்றம், மாநில வக்பு வாரிய மன்றங்களில் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்கள். இந்திய அரசின் இணை செயலருக்கு தகுதியான ஒருவர், மத்திய வக்பு மன்றத்தின் செயலராக நியமிக்கப்படவேண்டும், மாநில வக்பு வாரியங்களில் முதல் நிலை அலுவலர் (Class 1 – Officer) இருக்கவேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
சச்சர் குழுவின் அனைத்து பரிந்துரைகளும் இன்று கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் காரணங்களேயன்றி வேற என்னவாக இருக்க முடியும்?
இரண்டாவது குழு, காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மை நலத்துறை மத்திய அமைச்சராகவும், மாநிலங்களவை துணை சபாநாயகராகவும் இருந்த திரு ரஹ்மான் கான் தலைமையில் நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டது. அதில் பாஜகவின் உறுப்பினர்களும் இருந்தனர். அக்குழு, வக்பு வாரியத்தின் உட்கட்டமைப்புகள் சரியாக இல்லை. ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. வாரியம் திறமையற்று இருக்கிறது. நிதி குறைவாக இருக்கிறது. சரிவர மேம்படுத்தப்படவில்லை. இதுபோல வக்பு வாரியம் நடத்தப்படக்கூடாது என கூறியது.
முத்தாவல்லிகள் பற்றியும் அந்த குழு கருத்து கூறியது. வக்பு வாரியத்தின் மொத்த கவனமும், முத்தாவல்லியாக யாரை அமர வைப்பது, யாரை நீக்குவது என்பதில் தான் இருக்கிறது, எனவே அந்த அதிகாரத்தை நீக்கவேண்டும் என்று கூறப்பட்டது. வக்பு வாரியம் தொடர்பான ஆவணங்களை சரிவர நிர்வகிக்கவில்லை. அதை சரிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. நாட்டில் தற்போது உள்ள வக்பு வாரிய சொத்துகளை மீண்டும் ஆய்வு செய்யவேண்டும் என பரிந்துரைத்தது.
வக்பு வாரியத்திற்கு உட்பட்ட விஷயங்களில் சரியான முடிவெடுக்க நிபுணர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை கொண்டுவர வேண்டும். மொத்த வக்பு வாரியத்தையும் கணினிமயமாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இவை அனைத்தும் இந்த சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக, வக்பு வாரியத்தில் இருப்பவர்கள், தங்களிடம் வரும் வழக்குகளை மன்றத்தின் மூலமே பேசி ஒன்று நிலுவையில் வைப்பார்கள், அல்லது அவர்களுக்கே உரிய பாணியில் முடிவெடுப்பார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. ஜனநாயகத்தில், இந்தியா போன்ற மாபெரும் தேசத்தில் இதுபோன்ற நடைமுறை இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்திருக்கிறது.
இன்று கொண்டுவந்துள்ள சட்டதிருத்தத்தின் படி ஏற்கனவே இருந்த Law of Limitation அகற்றப்படுகிறது. முன்பிருந்த சட்டத்தின் படி Law of Limitation-ல், பல ஆண்டுகளாக யாரும் முறையிடாத நிலங்கள், இடைப்பட்ட காலத்தில் ஏதாவது நிகழ்ந்திருந்தால் அல்லது பல ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் இருந்தால், அதற்கு Law of Limitations இருந்திருக்க வேண்டும். ஆனால், யாரேனும் வந்து இந்நிலத்தில் எங்கள் மூதாதையர் இறை வழிபாடு செய்தனர் என்று கூறினால், அந்த ஒரு வார்த்தைக்காக, மொத்த நிலத்தையும் வக்பு சொத்தாக அறிவிக்கப்பட்டன. Evacuee Property Act 1950-ன் சட்டப்பிரிவு 108ஐ இந்த சட்டத்திருத்தம் மூலமாக திருத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சட்டவிரோத வக்பு வாரிய சொத்து மாற்றம் குறித்து 194 புகார்கள் ஆன்லைனில் வந்துள்ளன. 93 வழக்குகள் வக்பு வாரிய நிர்வாகிகளுக்கு எதிராக வந்துள்ளன. கூடுதலாக 279 புகார்களும் பதிவாகியுள்ளன. போராஸ், அகமதியாக்கள், அக்கானி இஸ்லாமியர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கு முன்பு இஸ்லாமியர்களில் உள்ள பல பிரிவினரும், பெண் பிரதிநிதிகளும் 19 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் உள்ள வக்பு வாரிய தலைவர், CEO ஆகியோரிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்செந்துறை கிராமம் இருக்கிறது. அங்கு 1500 ஆண்டுகள் பழமையான சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது 1.5 ஏக்கர் நிலத்தை விற்க சென்றபோது, தனது கிராமம் வக்பு வாரிய நிலம் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த கிராமத்தின் வரலாறு 1500 ஆண்டுகள் பழமையானது. ஆனால், மொத்த கிராமத்தையும் வக்பு சொத்து என அறிவித்து இருக்கிறார்கள். சூரத் municipal Corporation-க்கு சொந்தமான மொத்த சொத்தும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று கூறிவிட்டார்கள்.
இதெப்படி சாத்தியம் ? municipal Corporation-க்கு சொந்தமான நிலம் எப்படி தனிப்பட்ட ஒரு அமைப்பின் சொத்தாக மாறும்? 2012ல் கர்நாடகாவின் சிறுபான்மை ஆணையத்தின் அறிக்கையில், கர்நாடகா வக்பு வாரியம் 29,000 ஏக்கர் நிலத்தை வணிக ரீதியிலான இடமாக மாற்றிவிட்டது என கூறப்பட்டது. வக்பு வாரிய நிலம் மதம், தொண்டு சார்ந்த பணிகளை மேற்கொள்ளவே பயன்படுத்த வேண்டும். 2013 ஆம் ஆண்டு யார் வேண்டுமானாலும் வக்பு அறிவிக்கலாம் என்ற சட்டத்திருத்தம் இன்று மாற்றப்பட்டுள்ளது.
வருமான ஆவணங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு இருக்கிறது. அனைத்து வக்பு சொத்துகளையும் ஆய்வு செய்து முடிவெடுக்கும் பொறுப்பு ஆட்சியர்களுக்கே வழங்கப்படுகிறது.
வக்பு வாரியங்களில் 12,792 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 19,207 வழக்குகள் தீர்ப்பாயம் மற்றும் ஆணையங்களில் நிலுவையில் இருக்கின்றன. எனவே, வழக்குகள் 90 நாட்களில் பதிவு செய்து கோப்புகளில் இட வேண்டும். அதற்கான தீர்வு 6 மாதங்களில் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வக்பு வாரியத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர தொழில்நுட்ப உதவியோடு மேற்பார்வை பணிகள் மேற்கொள்ளப்படும் என திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்டுவரப்படும். இஸ்லாமிய மதத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
வக்பு வாரியங்களை சிறப்பாக நடத்த நிர்வாக திறனுள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள், வக்பு வாரியம் அமைந்துள்ள மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த நிர்வாக குழுவில் இடம்பெறுவர்.
இஸ்லாமிய ஏழை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டிய சொத்துக்கள் பறிக்கப்படுவது தடுக்கப்படும்.
இன்று கொண்டுவரப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத்திருத்தம் அனைத்து இஸ்லாமிய சமூக மக்களுக்கு பலனுள்ளதாக அமையும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இன்று கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தத்தை தமிழக பாஜக முழுமையாக வரவேற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.