மானிய தொகையையுடன் கடன் உதவிகள் வழங்கும் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் மக்களுக்கு இனி மின்சார கட்டணம் ஷாக் அடிக்குமா? இல்லையா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…!
நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.வீட்டின் மேற்கூரையில் சூரிய சக்தி மின்சாரத்தை தயாரிக்கும் அலகுகளை அமைக்கும் வீடுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பெறலாம்.
இந்த லட்சியத் திட்டத்திற்காக 75,021 கோடி ஒதுக்கீடு செய்து , மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி 29ம் தேதி ஒப்புதல் வழங்கியது. சொந்த வீடும் சோலார் பேனல்களை அமைப்பதற்கு ஏதுவான மொட்டை மாடியும் இருந்தால் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக மானிய தொகையையும் கடன் உதவிகளை மத்திய அரசு செய்து தருகிறது.
மானிய தொகையாக ஒரு கிலோ வாட் சோலார் அமைக்க 30,000 ரூபாயும், 2 கிலோ வாட் சோலார் அமைக்க 60,000 ரூபாயும், 3 கிலோ வாட் அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான சோலாரை அமைக்க 78,000 ரூபாயும் மத்திய அரசு வழங்குகிறது. இந்த மானிய தொகை சோலார் நிறுவியதிலிருந்து ஒரு வாரம் முதல் ஒரு மாதத்திற்குள் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் www.pm suryaghar.gov.in என்கிற இணையதளத்திலும் காண முடியும். இது மத்திய அரசின் திட்டம் என்பதால் பயம் இல்லை என்கிறார் ஓய்வு பெற்ற ஐஐடி ஊழியர் நாகராஜன்…
மத்திய அரசின் சோலார் திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இதற்காக, மேற்கூரை சோலார் அமைப்பாளர்களிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக 2 படுக்கையறை வீடுகளுக்கு சராசரியாக 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் கட்டவேண்டி இருக்கும். ஆனால் சோலார் திட்டத்தின் மூலமாக மின்சார கட்டணம் 200 ரூபாய்க்குள் முடிக்க முடியும் என்கிறார் Inforce solar நிறுவனத்தின் தலைவர் வினோத் கண்ணன்.
பிரதமரின் சூர்யோதய திட்டம் மூலம் சென்னை மாநகராட்சியில் மட்டுமே 70 மெகாவாட் அளவிலான சோலார் நிறுவப்பட்டுள்ளது. (next) நடப்பு நிதியாண்டில் 25 லட்ச வீடுகளில் சோலார் நிறுவ வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும்,
தற்போது வரை 10,000க்கும் அதிகமான விண்ணப்பங்களும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், பிரதமரின் சூர்யோதய திட்டத்தின் போர்டலை TANGEDCO இணையதளத்துடன் இணைப்பதற்கான முயற்சியிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மின்சார கட்டணத்தில் இருந்து விடிவுக்காலம் கொடுக்கும் வகையிலேயே பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது. கரன்ட்டை தொட்டால்தான் ஷாக் அடிக்க வேண்டும் என்பதில்லை, கரன்ட் பில்லைப் பார்த்தால்கூட பலருக்கும் ஷாக் அடிக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தில் இணையும் யாருக்கும் இனி ஷாக் அடிக்காது.