ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றதை கொண்டாடும் வகையில் இன்று ஒருநாள் இந்தியர்கள் அனைவருக்கும் இலவச விசா வழங்கப்படும் என அமெரிக்க விசா விண்ணப்பத் தளமான ‘அட்லிஸ்’ அறிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்னும் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92 புள்ளி 97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கத்தையும் தட்டிச்சென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89 புள்ளி 45 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார்.
2020-ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா இம்முறையும் முதலிடத்துக்காக கடுமையாக போராடினார். எனினும் வெள்ளி பதக்கமே கிடைத்தது.
இதற்கிடையே நீரஜ் சேப்ரா தங்கப்பதக்கம் வென்றால் இந்தியர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என அமெரிக்க விசா விண்ணப்பத் தளமான ‘அட்லிஸ்’ அறிவித்திருந்தது. இந்தியர்கள் எந்த நாட்டுக்குச் செல்ல விரும்பினாலும் இலவசமாக விசா வழங்கப்படும் என ‘அட்லிஸ்’ விசா விண்ணப்பத் தளத்தின் நிறுவனரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மொஹக் நஹ்தா தெரிவித்திருந்தார்.
இருப்பினும் கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்புக்கும் நீரஜின் கடுமையான உழைப்புக்கும் பலனில்லாமல் போனது. இதுகுறித்து தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மொஹக் நஹ்தா, பதக்கத்தின் நிறம் முக்கியமல்ல என்றும், நீரஜ்ஜின் சாதனையை கொண்டாடடும் வகையிலும் தாம் முன்பே உறுதி அளித்தபடியும் இந்தியர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இன்று (9.8.24) இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இலவசமாக விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தோடு இலவச விசாவையும் இந்தியர்களுக்கு பெற்று தந்திருக்கிறார் தங்க மகன் நீரஜ் சோப்ரா.