திருச்சி திருச்செந்துறை கிராம பகுதி முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் தங்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இனியாவது திருச்செந்துறை நிலம், கிராம மக்களுக்கு சொந்தமாகுமா ? என்பது குறித்து சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்…!
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருச்செந்துறை கிராமம். காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கிராமத்தில்,
வசிப்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். இதனை பறைசாற்றும் வகையில் இங்கு 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்துக்கள் அதிக வாழும் திருச்செந்துறை கிராமத்தில், நிலங்களை விற்கவோ, வாங்கவோ வேண்டும் என்றால், சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்ப் வாரிய அலுவலகத்தில், ‘ஆட்சேபனை இல்லா சான்றிதழ்’ பெற வேண்டும்,” என்று கடந்த, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுதெரியாமல் திருச்செந்துறை சேர்ந்த ஒருவர் தனது 1.2 ஏக்கர் நிலத்தை விற்க சென்றபோதுதான், இந்த நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்தனர். இந்த அறிவிப்பால், தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் குறித்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
அதைத்தொடர்ந்து, திருச்செந்துறை மக்களை அழைத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தையை நடத்தியதை அடுத்து, நிலங்களை பத்திரப் பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் ஏற்பட்ட சிக்கலை குறிப்பிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிப் குமார் கூறுகையில், திருச்செந்துறை கிராமத்தில் இனி நிலங்களை வாங்கவும் விற்கவும், பத்திரப்பதிவு செய்யவும் தடை இல்லை என்று தெரிவித்தார்.
திருச்செந்துறை கிராமத்தில் நிலங்களை வாங்கவும் விற்கவும் தடை இல்லை என்ற அறிவிப்பு ஆறுதல் தந்தாலும், இங்குள்ள நிலங்கள் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த மசோதா மூலம் திருச்செந்துறை மக்களுக்கு இனி விடிவு காலம் பிறக்கும் என்கிறார் நில மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா.
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்தத்தை வரவேற்பதாகவும், திருந்செந்துறையில் 25 குடும்பங்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும், பெரும்பாலும் இந்துக்கள் உள்ளபோது, இங்குள்ள நிலங்கள் எப்படி வக்பு வாரியத்திற்கு சொந்தமாகும்? என அக்கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்செந்துறை கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக இந்து மக்கள் அதிகளவில் வசித்து வருவதாகவும், இங்கு வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட சொந்தமில்லை என்கிறார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால்.
திருச்செந்துறையில் உள்ள நிலம் யாருக்கு என்ற சர்ச்சை கடந்த 2 ஆண்டுகளாக இருந்த வந்த நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மூலம், நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் திருச்செந்துறை கிராம மக்கள்.