ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்று ஜப்பான். அங்கு சராசரியாக ஓராண்டுக்கு ஆயிரத்து 500 முறை நில நடுக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 18 விழுக்காடு ஜப்பானில் மட்டுமே ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன. இதனால் பலர் உயிரிழக்கும் நிலையும் அவ்வப்போது உண்டாகிறது.
புவித் தகடுகள் ஒன்றோடு ஒன்று உராயும் இடத்தில் அந்நாடு அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
எப்போது வேண்டுமானாலும் நில நடுக்கத்தில் உயிரிழக்க நேரலாம் என்றும், ஆனால் அது இந்த நாளாக இருக்காது என்ற நம்பிக்கையிலுமே ஜப்பானியர்கள் வாழ்வதாகச் சொல்வார்கள்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜப்பானின் கியூஷூ தீவின் கடலோர பகுதியில்
சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 9 மற்றும் 7 புள்ளி ஒன்றாக நில அதிர்வு பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் ஜப்பான் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் அந்நாட்டில் பெரும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர்.
அத்தகைய நில நடுக்கம் ஏற்பட்டால் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும் என்றும், சுனாமியால் 10 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும் என்றும், ஒன்று புள்ளி ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜப்பான் மக்கள் செய்வதறியாது திகைப்புக்கு ஆளாகியுள்ளனர். 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையில் அதைவிட பல மடங்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
எனவே ஜப்பானில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகள் சொல்வதை கேட்டு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.