சுரங்க உரிமையாளர்களிடம் இருந்து ராயல்டி மீதான நிலுவைத் தொகைகளை வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், சுரங்க உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் ராயல்டியானது, வரியாக கருத்தப்படாது என்றும் உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
அந்த வகையில், ராயல்டியை வரியாக கருத முடியாது என்றும், ஏற்கெனவே இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு எதிரான தமிழக அரசு வழக்கில், ராயல்டியை வரியாக உச்சநீதிமன்றம் கருதியது தவறு என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராயல்டி மீதான நிலுவைத் தொகையை சுரங்க உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக 9 நீதிபதிகள் அமர்வில் 8 பேர் தீர்ப்பளித்தனர்.
மேலும், கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பின்தேதியிட்டு நிலுவைத் தொகையை வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அதற்கான கோப்பில் அவர் கையொப்பம் இடவில்லை.