தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்களின் நெருக்கடி அதிகரித்துவருவதாக புகார் எழுந்துள்ளது. அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
தளபதி என்று ரசிகர்கள் அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்திலும் முறையாக பதிவு செய்துள்ளார். தாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரண்டு படங்களை நடித்து கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கும் நடிகர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பதையே இலக்காக நிர்ணயித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக உணவகம், படிப்பகம், குறுதியகம், விழியகம் என பல்வேறு திட்டங்களை தொடங்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சட்டமன்றத் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர்களை அழைத்து பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துவரும் விஜய், அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாநாடாக அமையும் என விஜய் கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
அந்த மாநாட்டிலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் மற்றும் கொடி அறிமுக நிகழ்வு நடைபெற இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள ஜி.கார்னர் மைதானத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தொடங்கிய நிலையில், அங்குள்ள அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட, அதனைத் தொடர்ந்து சேலத்தில் மாநாடு நடத்தலாம் என திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், அங்கும் ஆளும்கட்சி தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் அளிக்கப்படுவதாக தமிழக வெற்றி கழகத்தினர் தெரிவித்துள்ளனர். திருச்சியில் தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தவிடாமல் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொண்டு வருவதாக திமுக மீதும், அதன் அமைச்சர்கள் மீதும் புகார் எழுந்துள்ளது.
திரையுலகில் பல்வேறு சவால்களை கடந்து உச்சத்தை தொட்ட நடிகர் விஜய், தமிழக அரசியல் களத்தில் ஏற்படும் நெருக்கடிகளையும், சவால்களையும் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடே பதிலாக அமையும் என்கின்றனர் நடிகர் விஜய்யின் ஆதரவாளர்கள்.