தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 467 சாலைகள் அபாயகரமானதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள சாலைகளின் தற்போதைய நிலை குறித்தும் அதன் தரம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
நாள் முழுவதும் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னையில், பராமரிக்கப்படாத மழைநீர் வடிகால் அமைப்புகள், சாலையின் நடுவில் போடப்பட்டிருக்கும் பாதாள சாக்கடை மூடிகள், வரம்பு மீறிய வேகத்தடைகள், குண்டும், குழியுமான சாலைகள் என 467 இடங்கள் அபாயம் மிகுந்ததாக இருப்பதாக அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சென்னையின் சாலைகளை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், , ”நீங்க ரோடு ராஜாவா “ ”ஜீரோ இஸ் குட்” என்ற அடைமொழியுடன் கூடிய விழிப்புணர்வு பதாதகைகளை அனைத்துப் பகுதிகளிலும் விளம்பரப்படுத்துவதும், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து சிறந்த ரீல்ஸ் எடுப்போருக்கு பரிசுத் தொகை வழங்குவதில் ஆர்வம் காட்டும் போக்குவரத்து காவல்துறையால் எந்த பலனும் இல்லை என்கின்றனர் சென்னை வாசிகள்.
சென்னையில் இருக்கும் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள், பாதாள சாக்கடை மூடிகள் மற்றும் மழைநீர் வடிகால் சல்லடைகள் அடையாளம் காணும் வகையில் வண்ணங்கள் பூசும் பணி மந்த கதியில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது உள்ளிட்டவைகளைத் தாண்டி சேதமடைந்த, குண்டும் குழியுமான சாலைகளும் விபத்துக்கான முக்கிய காரணங்கள் என்பதை உணர்ந்து, அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது,