வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ‘மகளிர் மேம்பாடு மன்றம்’ கடிதம் எழுதியுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கடந்த 5ம் தேதி வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த நிலையில் ஷேக் ஹசினாவுக்கு எதிரான போராட்டம் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையாக மாறியது .
இந்நிலையில், பாதிப்புக்கு உள்ளான வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ‘மகளிர் மேம்பாடு மன்றம்’ கடிதம் எழுதியுள்ளது.
அதில், இந்து வழிபாட்டு தலங்களில் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்துக்கள் தாக்கப்பட்டு இடம்பெயர கட்டாயப்படுத்தப்படுவதாகவும், தாக்குதலுக்கு உள்ளாகி பலர் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மகளிர் மேம்பாடு மன்றம்” வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட வங்கதேச மக்களுக்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.