கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பெண் மருத்துவர் பாலியல் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்த வகையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு வரும் 20-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.