யுபிஎஸ்சி அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்யும் முறை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போதே கொண்டு வரப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, இணை செயலாளர், இயக்குநர் உள்பட 45 பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு, இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், யுபிஎஸ்சி அதிகாரிகள் நேரடி நியமனம் என்பது, கடந்த 2005-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதே அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
வீரப்ப மொய்லி தலைமையிலான 2-வது நிர்வாக சீர்திருத்த ஆணையம், பல்வேறு துறைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப, அதற்கான நிபுணர்களை பணியமர்த்த பரிந்துரைத்ததாகவும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பரிந்துரையை அமல்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளிப்படையான முறையை உருவாக்கியுள்ளதாகவும், மீண்டும் ஒரு காங்கிரஸின் வேடம் அம்பலமாகியுள்ளதாகவும், அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.