தன் மீதும், கட்சி கொடி மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை, நடிகர் விஜய் பக்குவமாக எடுத்துக்கொண்டு, தமிழக மக்களுக்கு சேவை செய்யவேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம். பாஜகவின் முதல் உறுப்பினராக பாரத பிரதமர் இணைய உள்ளார். ஏற்கனவே இந்தியா அளவில் 11 கோடி உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளனர். தமிழகத்தில் 41 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மிகப்பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்து வருகிறது.
ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை விட இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. அதற்கான ஆரம்பக் கூட்டம் இன்று கமலாலயத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் சேர்க்கப்படும் உறுப்பினர்கள் ஆரோக்கியமான மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்வார்கள். அதற்கான ஆரம்பக் கூட்டம் இன்று நடைபெற்றது.
எப்படி நாங்கள் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்திருக்கிறோமோ அதே போன்று தம்பி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். தனது பாடலை அறிமுகப்படுத்தியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நிறைய அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
வருங்காலத்தில் அவர் எத்தகைய அரசியலை முன்னெடுத்துச் செல்லப் போகிறார், எப்படி தனது தொண்டர்களை வழிநடத்த போகிறார் என்பதெல்லாம் பார்த்துவிட்டு தான் அவரது அரசியல் கட்சியைப் பற்றி நாம் கருத்து சொல்ல முடியும்.
எது எப்படி இருந்தாலும் புதிய தலைவராக உருவாகி இருக்கிறார் என்ற வகையில் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தலைவர் உருவாகி வருகிறார் என்று முறையில் அவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விமர்சையாக கொடியேற்றினார், விமர்சனங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கொடி ஏற ஏற விமர்சனங்களும் ஏறியிருக்கிறது. இது ஆரோக்கியமான சூழல்தான். விமர்சனங்கள் இல்லை என்றால் கட்சி வளர முடியாது.
யானை மீதும் வாகை மலரின் மீதும் விமர்சனங்கள் வந்திருக்கிறது. யானையை பயன்படுத்தியதன் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
விஜயின் கட்சிக்கொடியில் வாகை மலர்தான் இருந்தது தாமரை மலர் இல்லை. தாமரை மலர் இருந்திருந்தால் நாங்களும் எங்களது கருத்துக்களை பதிவு செய்திருப்போம்.
அது வாகை மலரா அல்லது தூங்குமூஞ்சி மலரா என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் மத்தியில் விவாதம் நடைபெறுகிறது.
ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து கொள்கை அறிவித்த பிறகு விவாதங்கள் வரலாம். ஆனால் கொடியில் இருக்கும் பூ வாகை மலரா அல்லது தூங்குமூஞ்சி மலரா, யானையை போட்டாது சரியா?, இல்லையா? என்று விவாதம் நடக்கிறது.
குங்குமமும் மஞ்சளும் போல எப்படியோ கொடி மங்களகரமாக உள்ளது.
பாஜகவை சேர்ந்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரண்டாவது சுதந்திர போராட்டமான எமர்ஜென்சிலும் அதிகமான கைதானவர்கள் பாஜகவைச் சார்ந்தவர்கள் தான்.
அன்று எந்த காங்கிரசை காந்தி கலைத்து விடச் சொன்னார். அன்றிருந்த காங்கிரஸ் இல்லை என்று. இன்று இருக்கும் காங்கிரஸ் முற்றிலும் வேறானது. அன்றிருந்த காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக உழைத்தது. இன்று உள்ளது கோஷ்டிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. ஒருத்தர் கூட்டணி வேண்டும் என்று சொல்வார், ஒருத்தர் கூட்டணி வேண்டாம் என்று சொல்வார்.
ஒரு வயதான மூதாட்டி நாய்கடி சிகிச்சைக்கு ஊசி வாங்குவதற்காக அவரை கடைக்கு அனுப்பியதாக செய்தியை பார்த்தேன். மிகவும் கண்டிக்கத்தக்கது.
நாம் இன்று உலக முதலீடுகள் எல்லாம் இழுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறோம். ஆனால் ஒரு மூதாட்டியை ஊசி வாங்குவதற்காக அனுப்பும் அவல நிலை அரசாங்க மருத்துவமனையில் இருக்கிறது என்பதை வேதனையோடு பதிவு செய்கிறேன். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
மழைநீர் வடிகால் பணிகள் தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் சொல்கிறார். முன்பும் தயாராக இருப்பதாக சொல்லித்தான் மக்களை தத்தளித்து விட்டார்கள். எனவே தயார் நிலையில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.