சுனிதா வில்லியம்ஸ் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உட்பட 2 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நிலையில், இருவரும் இன்றி ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பவுள்ளது.
இந்நிலையில், விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச் ஆகியோர் 8 மாதங்களுக்கு பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என குறிப்பிட்டுள்ளது.