இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலேசிய பிரதமர் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உதவி கோரியதுடன், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார். சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை நாடும் நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இணைந்துள்ளது. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதன்முறையாக 1954ம் ஆண்டில் மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக, 1957ம் ஆண்டு முதலே இந்தியாவும் மலேசியாவும் நல்லுறவு கொண்டிருக்கின்றன.
முதல்முறையாக 1962ம் ஆண்டு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் இந்தியாவுக்கு வருகை புரிந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தினார்.
2015ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் மோடி மலேசியா சென்றதோடு, அதற்கடுத்து 2018 ஆம் ஆண்டும் பிரதமர் மோடி மலேசியாவுக்குச் சென்று பொருளாதார வர்த்தகம் தொடர்பாக இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தினார்.
இந்தச் சூழலில், 2019ம் ஆண்டு, அப்போதைய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது என்று குற்றம்சாட்டியதில் இருந்து இருநாட்டு உறவுகளில் விரிசல் விழுந்தது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்த நிலையில், இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக்க்கு மலேசியாவில் அடைக்கலம் மற்றும் குடியுரிமை வழங்கப்பட்டது. முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவின் இந்த நடவடிக்கைகள் இந்திய- மலேசிய உறவில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், மலேசியாவின் தலைமை மாற்றம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவுடனான உறவைப் புதுப்பித்து வருகிறது.
சமீப ஆண்டுகளாக சீனாவின் ஆதிக்க விரிவாக்க செயல்பாடுகள்,தனக்கு விசுவாசமாக இருக்கும் நாடுகளையே பெரும் பொருளாதார வீழ்ச்சியில் தள்ளியிருக்கிறது. மேலும் அந்நாடுகளுக்கு தேசிய அச்சுறுத்தலையும் சீனா ஏற்படுத்தி வருகிறது.
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பாகிஸ்தானின் குவாடர் விவகாரங்களில், அந்நாடுகள் சீன அழுத்தத்தின் கீழ் நசுக்கப்படுகிறது. அதன் காரணமாக சீனாவுக்கு கட்டுப்படும் நிலைக்கு அந்நாடுகள் தள்ளப்படுகின்றன. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்களில் சீனாவின் விரோதத்தை இந்த நாடுகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன.
இந்தியாவை எதிர்த்து கொண்டு சீனாவை ஆதரித்தால், ஒரு நாடு என்ன நிலைமைக்கு போகும் என்பதை மாலத்தீவு விஷயத்திலேயே மற்ற நாடுகளுக்கு நன்றாக புரிந்துவிட்டது.
இதற்கிடையே, ஆசிய-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் ஒரு பெரிய சக்தியாக இந்தியா வளர்ந்திருக்கிறது. மேலும் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க விரும்பும் நாடுகளுக்கு பொருளாதார மற்றும் வர்த்தக வாய்ப்புகளையும் இந்தியா வழங்குகிறது.
இதனால் இந்தியாவுடனான தங்கள் உறவுகளை மீட்டெடுக்கவும்,மேம்படுத்தவும் மலேசியா போன்ற நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றன.
மலேசியாவில் சுமார் 3 மில்லியன் இந்தியமக்கள் வாழ்கின்றனர். உலகின் மூன்றாவது பெரிய புலம்பெயர்ந்த இந்தியர்கள் வாழும் நாடாக மலேசியா விளங்குகிறது.
இவர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மீதமுள்ள 10 சதவீதம் பேர் தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி மற்றும் மராத்தி மொழி பேசும் இந்தியர்களாவார்கள்.
இந்தியர்களே மலேசியாவின் செழுமையான பன்முகத்தன்மைக்குப் பெரும் பங்காற்றுகின்றனர். மலேசியா இந்திய பாரம்பரியம் மற்றும் இந்திய வரலாற்றோடு பிணைந்துள்ளது. மலேசியாவில் உள்ள ஸ்ரீ வீர அனுமான் கோயிலுக்கு இந்தியர்கள் மட்டுமின்றி மலேசிய மக்களும் வழிபட்டு செல்கின்றனர்.
மலேசியா இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் 13வது பெரிய வர்த்தக நாடாக மலேசியா உள்ளது. மேலும், ஆசியானில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக வர்த்தக நாடாகவும் மலேசியா இருக்கிறது.
குறிப்பாக , இந்தியா மற்றும் மலேசியா இடையே தற்போது 20 பில்லியன்அமெரிக்க டாலர்களாக உள்ள இருதரப்பு வர்த்தகம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும், மலேசியாவும் தேசிய நாணயங்களில் வர்த்தகத்தை நடத்துவதற்கான கட்டமைப்பை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் இந்தியாவின் தேஜஸ் விமானங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நாடுகளில் மலேசியா முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக தற்போதைய தலைமையான ரஷ்யாவிடம் மலேசியா சென்ற ஆண்டே விண்ணப்பித்திருந்தது. இதற்கு ஆதரவளிக்குமாறு மலேசிய பிரதமர் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இதற்கிடையே ஆசியான் அமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அடுத்த ஆண்டு மலேசியா ஆசியானின் தலைமை பதவி ஏற்பதற்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
பாதுகாப்பு,சுற்றுசூழல், உள்கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் பண்டைய இந்திய மருத்துவ விஞ்ஞானமான ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் வளர்ச்சிக்கான உறவுகளை மேம்படுத்த இரு நாட்டு பிரதமர்களும் உறுதியளித்துள்ளனர்.
ஆசியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடான இந்தியா, பிற ஆசியான் நாடுகளுக்கு ஒரு பெருந்துணையாக இருந்து வருகிறது என்கிறார்கள் புவிசார் அரசியல் வல்லுநர்கள்.