மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் லட்சாதிபதி சகோதரி திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்களுக்கு அதற்கான சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், லட்சாதிபதி சகோதரி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில், 6 ஆயிரம் கோடி நிதியுதவி விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதன்மூலம் லட்சக்கணக்கான பெண்கள் லட்சாதிபதிகளாவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்த ஜல்கானை சேர்ந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
தாம் போலந்து சென்று திரும்பியதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அந்நாட்டினர் மகாராஷ்டிர மக்களை பெரிதும் மதிப்பதாகவும், போலந்து தலைநகரில் கோலாப்பூர் நினைவுச் சின்னம் இருப்பதாகவும் கூறினார்.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் போலந்தை சேர்ந்த ஏராளமான தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கோலாப்பூர் அரச குடும்பம் ஆதரவு அளித்ததால், கோலாப்பூர் மக்களின் சேவை, விருந்தோம்பல் பண்பை கெளரவிக்கும் விதத்தில் அங்கு நினைவு சின்னம் கட்டப்பட்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மத்திய அரசின் திட்டத்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகளானதாகவும், குறிப்பாக கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 11 லட்சம் பெண்கள் லட்சாதிபதிகளாக மாறியதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.