தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் தமிழக அரசு அடம்பிடிப்பதால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய 573 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ், 2024-25 கல்வியாண்டில் தமிழக அரசுக்கு 3 ஆயிரத்து 586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதில் மத்திய அரசு சார்பில் 60 சதவீத நிதியாக 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 40 சதவீத நிதியாக 1,434 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசு அதன் நிதி பங்கீட்டை நான்கு தவணையாக விடுவிப்பது வழக்கம். அந்த வகையில், இத்திட்டத்தின் முதல் கட்ட நிதி கடந்த ஜூன் மாதமே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக அரசு ஏற்காததாலும், அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததாலும், நிதியை விடுவிப்பதில் காலதாமதம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் அடுத்த மாதம் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பயன்பெறும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.
இதுமட்டுமன்றி கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மாநில அரசின் அலட்சியம் காரணமாக தற்போது நிதி ஒதுக்கீட்டில் சுணக்கம் நிலவுவதால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ மாநில அரசு ஒப்புக்கொண்டதை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.