பத்து மாநிலங்களில் 28 ஆயிரத்து 602 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக 12 தொழில் நகரங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய தொழில் வழித்தட திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 1 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் நிறுவனங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், சுமார் 30 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தேசிய தொழில் வழித்தட திட்டத்தின்கீழ் உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் புதிதாக 12 தொழில் நகரங்களை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் குர்பியா, கேரளாவில் பாலக்காடு, தெலங்கானாவில் ஜஹீராபாத், ஆந்திராவில் ஓர்வாகல் மற்றும் கொப்பர்த்தி உள்ளிட்ட 12 இடங்களில் புதிதாக தொழில் நகரம் நிறுவப்படுவதாக கூறிய அவர், இதற்காக மத்திய அரசு 28 ஆயிரத்து 602 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக சர்வதேச தரத்தில் பசுமைமிகு ஸ்மார்ட் நகரங்களாகவும், நீடித்த தொழில் வளர்ச்சிக்கு உகந்த பகுதியாகவும் அவை மேம்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.