சென்னை- நாகர்கோவில் உள்ளிட்ட மூன்று வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக தொடங்கிவைத்த பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
மதுரை- பெங்களூரு மற்றும் சென்னை- நாகர்கோவில் மற்றும் மீரட்- லக்னோ இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவில் நகரமான மதுரை தொழில்நுட்ப நகரமான பெங்களூருடன் வந்தே பாரத் ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
நாட்டில் 102 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும், விரைவில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், தென் மாநிலங்களின் மேம்பாட்டை உறுதிப்படுத்துவது அவசியம் என கூறிய பிரதமர் மோடி, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.
நிகழாண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 7 மடங்கு அதிகம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.