மேற்கு வங்கத்தில் 48 ஆயிரத்து 600 பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குறித்த காலவரையறைக்குள் தண்டனையை நிறைவேற்றும் வகையில், கடும் சட்டம் இயற்ற வேண்டுமென பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்து மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி, மம்தா பானர்ஜிக்கு அனுப்பிய கடிதத்தில்,
மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ சட்டத்தின்கீழ், 48 ஆயிரத்து 600 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதில் மேற்கு வங்க அரசு மந்தமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, இதைத் துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ், ஏற்கெனவே பாலியல் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கும் அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக அந்தக் கடிதத்தில் மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறியுள்ளார்.