தேசம் தான் முதன்மை என்ற கொள்கையை பாஜக தொண்டர்கள் பின்பற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். மேலும் முதல் உறுப்பினராக தமது உறுப்பினர் அட்டையை அவர் புதுப்பித்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதிய ஜனசங்கத்தின் காலத்தில், கட்சிக்காரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சுவர்களில் கட்சியின் சின்னத்தை வரைந்ததாகவும், ஆட்சிக்கு வருவதற்கு இது உதவாது என மற்ற கட்சி தலைவர்கள் கேலி செய்ததாகவும் தெரிவித்தார். சுவரில் தாமரை வரைந்தவர்கள் நாங்கள், இந்த தாமரை என்றாவது ஒரு நாள் மக்களின் இதயங்களில் வர்ணம் பூசப்படும் என்ற நம்பிக்கை இருந்ததகவும் அவர் கூறினார்.
மக்கள் பிரச்னைக்காக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக பாஜகவினர் தொடர் போராட்டம் நடத்தி வந்ததாகவும், அதனால் அவர்கள் தொடர்ந்து சிறைக்கு செல்ல வேண்டி இருந்ததாகவும் மோடி கூறினார். சிறைக்கு சென்ற பெண் தொழிலாளி ஒருவர், தனது 9 மாத குழந்தையுடன் ஒரு மாதம் சிறையில் இருந்ததாகவும் அப்படித்தான் பாஜக வளர்ந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பாஜகவினர் சோர்வின்றி மக்களுக்காக உழைத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். தேசம் தான் முதன்மையானது என்ற கொள்கையை பாஜகவினர் பின்பற்றி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங்,அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.