இந்தியர்கள், அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களான இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை போதுமான அளவு எடுத்துக் கொள்வதில்லை என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தி லான்செட் குளோபல் ஹெல்த் ஜர்னல் என்ற இதழ், சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வுக் குழுவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். 185 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டன.
உலக மக்கள்தொகையில் 99.3 சதவீதம் பேர், போதுமான ஊட்டச்சத்து உட்கொள்வதன் அளவை மதிப்பீடு செய்ய, சர்வதேச உணவுமுறை தரவுத்தளத்திலிருந்து பொதுவில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் போன்ற சப்ளிமெண்ட்ஸ் எதுவும் பயன்படுத்தாமல் இருக்கும் மக்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் பல ஆச்சரியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதம், அதாவது ஐந்து பில்லியனுக்கும் அதிகமான மக்கள், போதுமான அயோடின், வைட்டமின் E மற்றும் கால்சியம் சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆண்களை விட பெண்களே அதிக அளவில் அயோடின், வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றை போதிய அளவு உணவில் எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர் என்றும்,பெண்களை விட அதிகமான ஆண்களுக்கு மெக்னீசியம், வைட்டமின் பி6, துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி குறைபாடு உள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்களுக்கே அயோடின் குறைபாடு அதிகம் உள்ளது என்றும் ஆண்களுக்கு துத்தநாகம் மற்றும் மெக்னீசிய குறைபாடுகளே அதிகமாக உள்ளது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திலிருந்து முப்பது வயதுக்குள் இருப்பவர்கள், கால்சியம் குறைபாடு அபாயத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கும் இந்த ஆய்வறிக்கை, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தான் இந்த குறைபாடு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்தப்படவில்லை என்பதால் அத்தகைய உணவுகள் உட்கொள்ளப்படும் பகுதிகளில் இந்த ஆய்வு முடிவுகள் ஒத்துப் போகாமல் இருக்கலாம் என்று ஆய்வறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது
ஊட்டச் சத்துக்கள் தேவைப்படும் மக்களை எளிதில் அடையாளம் காண,பொது சுகாதார நிபுணர்களுக்கு இந்த ஆய்வு பயன்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மொத்தத்தில், அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவுகளின் முக்கியத்துவத்தை தி லான்செட் குளோபல் ஹெல்த் ஜர்னல் நடத்திய ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலகளாவிய ஊட்டச்சத்து சவால்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை எதிர்கொள்ளவும்,முறையான நிவர்த்தி காணவும், இது போன்ற தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் தரவு சேகரிப்பு அவசியம் என்று சுகாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.