தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா, தெரியாதா என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மாநகரில் குடிசைகளில் குடியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை உயர் நீதிமன்றம் நியமித்தது.
அதன்படி நேரில் ஆய்வு செய்த வழக்கறிஞர், பெரும்பாக்கம் உள்ளிட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது எனவும் அங்கு போதை மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் எனவும் அறிக்கை தாக்கல் செய்தார்.
வழக்கறிஞரின் இந்த அறிக்கையை படித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் தெரியுமா? தெரியாதா? என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
மேலும், வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை குறித்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.