கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அம்மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
மருத்துவரின் கொலை வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்த உச்சநீதிமன்றம், மருத்துவமனையின் பாதுகாப்புப் பணிகளை சி.ஐ.எஸ்.எஃப் படையினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், பாதுகாப்புப் பணிகளை கையிலெடுத்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு மேற்குவங்க அரசு தளவாட உதவிகள் உள்ளிட்டவை செய்துதரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது, அதில் கலவரம் ஏற்பட்ட மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் படையினருக்கு உதவி செய்வதில் மேற்குவங்க அரசு ஒத்துழையாமையை கடைபிடிப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.
சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.