ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்ற மதிமுகவினர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
துரை வைகோ தமது எக்ஸ் தளத்தில், “மறுமலர்ச்சி உறவுகளுக்கான வேலை வாய்ப்பு என்ற தலைப்பில், மடகாஸ்கரில் விவசாயம் சார்ந்து இயங்கி வரும் நிறுவனத்திற்கு, கனரக டிரக் மெக்கானிக், பொறுப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேவை” என அறிவித்துள்ளார்.
மேலும், “விண்ணப்பிக்கும் நபரின் பயோடேட்டாவை மதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆசைதம்பியின் மின்னஞ்சலுக்கோ அல்லது அவரின் வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்” என தெரிவித்துள்ளார். குறிப்பாக, “விண்ணப்பித்த மதிமுக குடும்பத்தினர்களில் மேற்கண்ட அடிப்படை தகுதி உடையவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என நிபந்தனையும் விதித்துள்ளார்.
தேர்தலில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி என அனைத்துக் கட்சியினரின் வாக்குகளை பெற்றுக் கொண்டு, தற்போது மதிமுகவினருக்கு மட்டும் வேலைவாய்ப்பு என அறிவிப்பது எந்த வகையில் நியாயம் என திருச்சி நாடாளுமன்ற மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.