சிங்கப்பூரில் அமையும் திருவள்ளுவர் கலாச்சார மையம் , உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துளளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :
“உலகில் முதல் முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள, பாரதப் பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பாகவும் முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர்கள் பெருமை கொள்ளும் விதமாக அறிவித்துள்ள இந்த அறிவிப்பின் மூலமாக, பன்னெடுங்கால பழமை வாய்ந்த தமிழர் கலாச்சாரம் விண்ணளவு உயரும் என்கிற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
பன்முகம் கொண்ட இந்தியாவின் பழமையான வரலாற்றில், உலகின் மிகவும் தொன்மையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது என்று எப்போதும் கூறி வரும் நமது பிரதமர் , தற்போது தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சிங்கப்பூரில் அமையவிருக்கிற இந்த கலாச்சார மையமானது, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை, மொழி, கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும். பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு தேசங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாகவும், இந்த கலாச்சார மையம் செயல்படும்” என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.