தி.மு.க. ஆட்சியில் பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சை பூதலூரிலும், ஒரத்தநாடு பகுதியிலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றபோது காவல்துறையும், மருத்துவத்துறையும் தம்மை அலைக்கழித்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
பாலியல் வழக்குகளை இவ்வளவு அலட்சியமாக கையாளும் அளவிற்கு நிர்வாகம் சீர்கெட்டுள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
ஒரத்தநாடு, பூதலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வன்கொடுமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.