பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி” திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.
கடந்த 2019- ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்த வழிவகுக்கும் “பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி” திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 3 தவணையாக மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் உள்ள 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 17 தவணைகளில் 3 புள்ளி 24 லட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் கடந்த ஜூலை 31 நிலவரப்படி தமிழகத்தில் 46 லட்சத்து 76 ஆயிரத்து 80 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதும் இவர்களது வங்கிக் கணக்கில் மொத்தம் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 51 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.