அமெரிக்காவில் தாம் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சர்வதேச வர்த்தகத்தில் டாலரைப் பயன்படுத்தாமல் உள்ள நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பை தற்போது பார்க்கலாம்.
சர்வதேச வர்த்தகத்தின் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டாலர் இன்னும் உலகச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், உலக சந்தையில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் பங்கு வேக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
அமெரிக்காவுடனான பொருளாதாரப் போட்டியில் சீனா, இப்போது 120க்கும் மேற்பட்ட நாடுகளுடன் முக்கிய வர்த்தக உறவுகளை வைத்திருக்கிறது. சர்வதேச அளவில் சீனாவின் ஏற்றுமதி சுமார் 3.6 டிரில்லியன் அமெரிக்க டாலராகும்.
கடந்த 20 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு 8.9 சதவீதத்திலிருந்து லிருந்து 18.5 சதவீதமாக, இருமடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் பங்கு 20.1 சதவீதத்திலிருந்து 15.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் உலகளாவிய வர்த்தக ஆதிக்கப் போட்டியில் அமெரிக்காவின் பிடிதளர்ந்து வருகிறது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த காரணத்தால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது. அமெரிக்காவின் இந்த முடிவு அமெரிக்காவுக்கே எதிராக அமைந்து விட்டது.
இந்தியாவுடன் ரூபாயில் , பாகிஸ்தானுடன் சீன நாணயமான யுவானில் என்று ரஷ்யாவின் வர்த்தகம் தொடர்ந்தது. மேலும் 2023ம் ஆண்டு சீனாவும் சவுதி அரேபியாவும் நாணய மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
தொடர்ந்து, இந்தியா, பிரேசில், மலேசியா, ஈரான், அர்ஜென்டினா, கானா, துருக்கி வெனிசுலா மற்றும் பொலிவியா போன்ற நாடுகள், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை ஓரங்கட்டின. டாலருக்கு பதிலாக தங்கள் நாட்டு நாணயங்களையே சர்வதேச வர்த்தகத்துக்குப் பயன்படுத்தி வருகின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தொழிலாளர் வர்க்கத்தினர் பலத்த ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், விஸ்கான்சின் மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில், டாலரைப் பயன்படுத்தாத நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், விஸ்கான்சினில் ஜனநாயக கட்சியின் போட்டியாளரான துணை அதிபர் கமலா ஹாரிஸ், டிரம்பை விடவும் 8 சதவீத புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் பொருளாதார தேசியவாதம் மற்றும் டாலரின் பாதுகாப்பு பற்றியும் தொடர்ந்து வலியுறுத்தி பேசி வருகிறார்.
டாலரின் நிலை கடந்த எட்டு ஆண்டுகளாக சரிந்து வருவதாக கூறியிருக்கும் ட்ரம்ப், அதற்கு நேர்மாறாக, டாலர் உலகின் இருப்பு நாணயமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
டாலர் அல்லாத பிற நாணயங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு எவ்வாறு அபராதம் விதிக்கலாம் என்பது குறித்து டிரம்ப் மற்றும் அவரது பொருளாதார ஆலோசகர்களுக்கு இடையே விரிவான விவாதங்கள் நடந்ததாகவும் அதன் பிறகே இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியியிட்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.
இந்த அறிவிப்பின் பின்னணியில், டாலரை பயன்படுத்தாத நாடுகளுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள், நாணய கையாளுதல் கட்டணங்கள் உட்பட பல தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்
இந்த அச்சுறுத்தல் சீனா மற்றும் இந்தியாவுக்கானது என்று புவிசார் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.