செமிகான் இந்தியா 2024 மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உலகில் உள்ள ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் இருக்க வேண்டும் என்பதே இலட்சியம் என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவில் செமிகண்டக்டர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் இது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மொபைல் போன், விண்கலம், விசைப்பலகை என எந்த மின்னணு சாதனமாக இருந்தாலும் அவற்றில் செமிகண்டக்டர் சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் துறையில் ஒரு சில நாடுகளை மட்டுமே பெரும்பாலான நாடுகள் சார்ந்துள்ளன. இதன் காரணமாக கோவிட் காலத்தில் அதன் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, செமிகண்டக்டர் உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உரக்கத் தெரிவித்திருந்தார்.
தொடர்ச்சியாக, பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணத்தின் போது, இந்தியா- சிங்கப்பூர் இடையே செமிகண்டக்டர் கிளஸ்டர்களின் வளர்ச்சி, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.
தற்போது, இந்திய செமிகண்டக்டர் சந்தையின் மதிப்பு தோராயமாக 23.2 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. 2030ம் ஆண்டில் 110 பில்லியன் அமெரிக்க டாலராக இது உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவும், தைவானும் கால் வைக்காத காலக் கட்டத்தில், 1984 ஆம் ஆண்டு செமிகண்டக்டர் காம்ப்ளக்ஸ் லிமிடெட் (SCL), சண்டிகரில் 5000 nm செயல்முறையுடன் கூடிய உற்பத்தியைத் தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக 1989ல் ஏற்பட்ட தீ விபத்தில், முழு தொழிற்சாலையும் சாம்பலானது. மன்மோகன் சிங் தலைமையிலான UPA அரசு 2006 ஆம் ஆண்டு முதல் குறைக்கடத்தி கொள்கையை அறிவித்தது என்றாலும் அது காகிதங்களில் மட்டுமே இருந்தது.
இதற்கிடையே, சீனா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது. தற்போது உலகளாவிய செமிகண்டக்டர் போட்டியில் 12 தலைமுறைகள் பின்தங்கி இருந்தாலும் இந்தியா படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு வருகிறது,
அடிப்படை மின்னணு செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் தனித்த குறைக்கடத்திகள், ஒளி தொடர்பான ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் சென்சார்கள் உற்பத்தியில் இந்தியா இறங்கியுள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையில் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றை ஆதரிக்க 50 சதவீத சீரான ஊக்கத்தொகையை வழங்க ஒரு விரிவான குறைக்கடத்தி திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான செமிகண்டக்டர் திட்டங்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனமான “சிப்ஸ் ஃபார் விக்சித் பாரத்” என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, தென் கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் சிப் தயாரிப்பில் முன்னணி வகிக்கின்றன. தற்போது சிப் தயாரிக்கும் துறையின் மதிப்பு 37.4 லட்சம் கோடியாக உள்ளது.
டிசைன் ஃபேப்ரிகேஷன் (சிப் உற்பத்தி) சோதனை மற்றும் அசெம்பிளிங் ஆகிய அனைத்து நிலைகளிலும் சிப்புக்களை உருவாக்க இந்தியா தயாராகி விட்டது என்றே சொல்லவேண்டும்.
Intel, AMD மற்றும் Qualcomm போன்ற முக்கிய செமிகண்டக்டர் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தங்கள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையங்களை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு குஜராத்தில் அமெரிக்காவின் மைக்ரோன் டெக்னாலஜி என்ற நிறுவனம், அசெம்பிளி, டெஸ்டிங், மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் (ஏடிஎம்பி) உற்பத்தி ஆலையைத் தொடங்கியது
Micron Technology, தவிர Tata Electronics Private Limited, Tata Semiconductor Assembly and Test Pvt Ltd, CG Power, Kaynes Semicon -ஆகிய நிறுவனங்கள் செமி கண்டக்டர் உற்பத்தியில் இறங்கியுள்ளன. மேலும் அதானியின் இரண்டு நிறுவனங்கள் செமி கண்டக்டர் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் லார்சன் & டூப்ரோ லிமிடெட் 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தியைத் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 15 தயாரிப்புகளை வடிவமைத்து 2027ம் ஆண்டு விற்பனையைத் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய 5G ஸ்மார்ட்போன் சந்தையை இந்தியா கொண்டுள்ளது.மேலும் மொபைல் போன் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 85,000 பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட திறமையான வல்லுனர் குழுவை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது
இந்தியாவில் வளர்ந்து வரும் செமிகண்டக்டர் துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 மில்லியன் வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் “செமிகண்டக்டர் எதிர்காலத்தை வடிவமைப்பது.”என்று தலைப்பில் நடக்கும் SEMICON India 2024 மூன்று நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியா குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாறும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய 150 பில்லியன் டாலர் முதலீடுசெய்திருக்கும் இந்தியா இன்னும், பத்தாண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு 500 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
முன்னதாக, பசுமை ஹைட்ரஜன் பற்றிய 2வது சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய போது, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பசுமை ஹைட்ரஜன் துறைக்கான பொதுக் கொள்கையில் தேவைப்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் பரிந்துரைக்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.